Wednesday, November 2, 2011

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் தொடர்பினில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்குமாறு அரசு உத்தரவிடவில்லை-இலங்கை கடற்படை!

Wednesday, November 02, 2011
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் தொடர்பினில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்குமாறு அரசு உத்தரவிட்டிருக்க வில்லையென வடபிராந்திய கடற்படை தலைமை அறிவித்துள்ளது. நேற்றைய தினம் இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்களுக்கும் உள்ளூர் மீனவர்களுக்குமிடையே காரைநகர் கடற்பரப்பினில் இடம் பெற்ற கைகலப்பினில் உள்ளுர் மீனவர்கள் சிலர் காயமடைந்திருந்தனர்.

இதே வேளை இ;ச்சம்பவத்தையடுத்து உள்ளூர் மீனவர்கள் முப்பத்திமூன்று பேர் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர். அவர்களுடைய படகுகள் பன்னிரண்டு தடுத்து வைக்கப்பட்டது. இது தொடர்பினில் மீனவ அமைப்புக்கள் கடற்படை தலைமையுடன் தொடர்பு கொண்ட போதே மேற்கண்டவாறு பதிலளிக்கப்பட்டுள்ளது.

அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்கள் தொடர்பினில் எந்தவொரு நடவடிக்கையினையும் கடற்படை எடுத்திருக்கவில்லையென மீனவ அமைப்புக்கள் குற்றச்சாட்டுக்களை எழுப்பியிருந்தன. அவ்வேளையிலேயே இந்திய மீனவர்கள் தொடர்பினில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்குமாறு அரசு உத்தரவிட்டிருக்க வில்லையென வடபிராந்திய கடற்படை தலைமை தெரிவித்துள்ளது. இதையடுத்து திட்டமிட்டவகையினில் உள்ளூர் மீனவர்களுக்கும் இந்திய மீனவர்களுக்குமிடையே மோதல்களை உருவாக்க இலங்கை அரசு முற்படுகின்றதாவென்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் மீனவர்களுடைய படகுகள் பன்னிரண்டும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. அவை படகு உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தையடுத்து இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட உள்ளூர் மீனவர்கள் முப்பத்திமூன்று பேரும் நேற்றிரவே விடுவிக்கப்பட்டுவிட்டனர்.

No comments:

Post a Comment