Sunday, November 20, 2011லண்டன்: இங்கிலாந்து காவல்துறையின் ‘உயர்ந்த மனிதன்’ என்று புகழப்படுகிறார் ஆன்டனி வாலின் (25). புகழ்ச்சிக்காக அல்ல... உண்மையிலேயே இவர் உயர்ந்த மனிதர்தான். எல்லாரையும் அண்ணாந்து பார்க்க வைக்கும் இவரது உயரம் 7 அடி 2 அங்குலமாம். எங்கள் பரம்பரையே உயரமான பரம்பரைதான் என்றார் ஆண்டனி.
இது குறித்து அவர் கூறியதாவது:
எங்கள் குடும்பத்தில் எல்லாருமே உயரமானவர்கள். என் சகோதரி 6 அடி 3 அங்குலம். நர்ஸ் பயிற்சி பெற்று வருகிறார். அம்மாவின் உயரம் 5 அடி 11 அங்குலம். அப்பா 6 அடி 1 அங்குலத்தில் ஆஜானுபாகுவாக இருப்பார். இங்கிலாந்தின் கவுல்ஸ்டன் பகுதியில் காதலி டேனியுடன் வசித்து வருகிறேன். எனக்கு 2 வயதில் ஜோஷ்வா என்ற மகன் உள்ளான். இப்போது பார்த்தாலும் அவன் 5 வயது பையன் போல தெரிவான். எங்கள் குடும்பத்தில் இருந்து காவல் துறையில் சென்றது நான் மட்டும்தான். முதலில் ரக்பி விளையாட்டு வீரனாக இருந்தேன். இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையில் சேர்ந்தேன்.
பாதுகாப்பு பணிக்காக வெளியில் யூனிபார்ம் போட்டு செல்லும்போது அனைவரும் என்னை ஆச்சரியமாக பார்ப்பார்கள். அருகில் வந்து, ‘சார்.. ஒரே ஒரு போட்டோ எடுத்துக் கொள்கிறேன்’ என்று நச்சரிப்பார்கள். யாருக்கும் மறுப்பு சொன்னதே இல்லை. குற்றவாளிகள்கூட என்னுடன் போட்டோ எடுத்துக் கொள்ள விரும்புகின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு நான் ஒரு காட்சிப் பொருளாகி விட்டேன். முதலில் வருத்தமாக இருந்தது. இப்போது நானே என்னை ரசிக்க தொடங்கி விட்டேன்.
உயரமாக இருப்பதால் உடைகள் தைப்பதில் இருந்து காலணி வாங்குவது வரை எதுவும் செட் ஆகாது. பணியில் சேர்ந்து பல நாட்கள் கழித்தே எனக்கு சீருடை வழங்கப்பட்டது. நெரிசலான பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும்போது குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை எளிதாக கண்டுபிடித்து விடுவேன். இந்த விதத்தில் என் உயரம் எனக்கு உதவுகிறது என்பதில் மகிழ்ச்சிதான். இவ்வாறு ஆன்டனி வாலின் கூறினார்.
No comments:
Post a Comment