Tuesday, November 22, 2011

3ம் இணைப்பு:-2012 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்ட உரை ஆரம்பமாகி சில நிமிடங்களில் ஐ.தே.க உறுப்பினர்களின் எதிர்ப்பு நடவடிக்கை ரகளை போத்தல் வீச்சு-வெளிநடப்பு!

Tuesday, November 22, 2011
2012 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்ட உரை ஆரம்பமாகி சில நிமிடங்களில் ஐ. தே. க உறுப்பினர்களின் எதிர்ப்பு நடவடிக்கையினால் சபையில் அமளிதுமளி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐ. தே. க வினர் வெளி நடப்பு செய்தனர்.

நேற்று பிற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சமுர்த்தி அதிகாரிகள் ஓய்வூதியம் பெறும் விதத்தில் புதிய மாற்றம் கொண்டு வரப்படும் என அறிவித்தார். இதன்போது சபையில் ஆளும் தரப்பினர் மேஜையில் தட்டி ஆரவாரம் செய்தனர். எதிர்க் கட்சியினர் (ஐ. தே. க) ஏற்கனவே ஆயத்தப்படுத்திய சுலோக அட்டைகளை ஏந்தி எழுந்து நின்றனர். ‘வெட்கம்’ என மும்மொழிகளிலும் எழுதிய சுலோக அட்டைகளை ஏந்தி நின்றனர்.

எதிர்தரப்பு ஆசனப் பகுதியில் பின்வரிசையில் அமர்ந்துள்ள ஆளுந் தரப்பு உறுப்பினர் லொஹான் ரத்வத்த முன் ஆசனத்தில் எழுந்து நின்று சுலோக அட்டையை ஏந்தி நின்ற ஜோன் அமரதுங்கவின் கையிலிருந்த சுலோக அட்டையை பறித்து கிழித்து வீசினார்.

எதிர்த் தரப்பினரின் கவனம் பின்பக்கமாக இருந்தபோது ஆளும் தரப்பு பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த பிரதி அமைச்சர் லலித் திஸாநாயக்க ஜோன் அமரதுங்கவின் அருகிலிருந்த பி ஹெரிசன் எம். பியின் கையிலிருந்த சுலோக அட்டையை பறித்துச் சென்று கிழித்தெறிந்தார்.

‘விட்டு விடுங்கள் சிறிது நேரம் சுலோக அட்டையை ஏந்தி நின்ற பின்னர் அவர்களே ஓய்ந்து விடுவார்கள்’.

“அவர்களுக்குத் தேவை நாளை ஊடகங்களில் தாங்கள் சுலோக அட்டைகளை ஏந்தி நிற்பதை காண்பிக்க வேண்டும் அதற்கு வழி விடுங்கள்”. “ஊடகவியலாளர்களே இவர்களை புகைப்படம் எடுத்துக்கொள் ளுங்கள். ஆளும் தரப்பு எமது உறுப்பினர்கள் தங்களது ஆசனத்தில் அமர்ந்துகொள்ளுங்கள்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது உரையை நிறுத்தியவராக கூறினார்.

இதேவேளை எதிர்க் கட்சி ஆசனப் பகுதியில் பின் வரிசையில் அமர்ந்திருக்கும் மற்றுமொரு ஆளும் தரப்பு எம். பியான ரொஷான் ரணசிங்க முன் வரிசையில் எழுந்து நின்ற ஜோன் அமரதுங்கவின் தோள்களில் தட்டிவிட்டு ஓடினார்.

இவரை இடை மறிந்த ஐ.தே.க எம். பி. ஹரின் பர்னாண்டோ, ஏன் அவரைத் தட்டினாய் எனக் கேட்க ஆளும் தரப்பின ருக்கும் எதிர்த் தரப்பினருக்கும் முறுகல் நிலை தோன்றியது.

ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளமுற் பட்டனர். சிலர் இதனைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர் தாங்களும் தாக்குவதற்காக ஓடினர்.

ஜனாதிபதி ஆசனத்தில் எழுந்துநின்றவாறு ஆளும் தரப்பு உறுப்பினர்களை சமாதானம் செய்ய முற்பட்டார். பிரதி அமைச்சர் விஜிதமுனிசொய்சா ஜோசப் மைக்கல் பெரேரா எம்பியின் மேஜையிலிருந்த வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டு புத்தகத்தை தூக்கி எறிந்தார். மற்றுமொருவர் கரு ஜயசூரியவின் மேல் படும்படி எறிந்தார்.

இதனையடுத்து அமைச்சர் மேர்வின் சில்வா எதிர்தரப்பிற்குள் புகுந்தார். உடனே அவரை வெளியே இழுத்துவர ஆளும்தரப்பு உறுப்பினர்கள் முற்பட்டனர்.

பாராளுமன்ற முதற் கோலாசான் மற்றும் பிரதி முதற் கோலாசான் ஆகி யோர் முரண்பட்டுக் கொண்டிருக்கும் உறுப்பினர்களை சாந்தப்படுத்த முற்பட்டனர்.

இதன் போது அங்கு தண்ணீர் போத் தல்களும் வீசப்பட்டன. இதையடுத்து இந்த தண்ணீர் போத்தல்கள் எங்கிருந்து வந்தது யாரால் வீசப்பட்டது என பலரும் திகைத்து நின்றனர். படைக்கல சேவிதரை அழைத்த ஜனாதிபதி இந்தத் தண்ணீர் போத்தல் பார்வையாளர்களிடமிருந்து வீசப்பட்டதாக கூறுகிaர்கள். பொலிஸாரின் உதவியுடன் உடனடியாக தேடுங்கள் எனக் கூறினார்.

இதற்கிடையே ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட ஐ.தே.க. எம்பிக்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

எமக்கு பலமான எதிர்க்கட்சியொன்று தேவையென்றே நாம் நினைக்கிறோம். ஆனால் அவ்வாறு இல்லை என்பதை இவர்கள் நிரூபித்துவிட்டுச் செல்கிறார்கள். போகட்டும் இப்போது மிக அமைதியாக வரவு- செலவு திட்ட உரையை நிகழ்த்துவோம் எனக் கூறித் தொடர்ந்தும் உரையாற்றினார்
ஜனாதிபதி. இந்த அமளிதுமளியால் ஜனாதிபதியின் உரை சுமார் 10 நிமிடம் தடைப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment