
Monday, November 21, 2011அரசாங்க ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை 10 வீதத்தால் அதிகரிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வரவு - செலவுத் திட்டம் மூலம் யோசனை முன்வைத்துள்ளார்.
பாதுகாப்பு துறையில் பதவிநிலை அதிகாரிகளுக்கு ஜனவரி மாதம் முதல் ஐந்து வீத அதிகரிப்பும், பதவி நிலை அல்லாத வகுப்பினருக்கு ஜனவரி மாதம் முதல் 10 வீத அதிகரிப்பும் வழங்கப்படும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
பதவிநிலை அதிகாரிகளுக்கான எஞ்சிய ஐந்து வீத சம்பள அதிகரிப்பு ஜூலை மாதம் முதல் வழங்கப்படவுள்ளது.
ஜனாதிபதி இன்று முன்வைத்த 2012 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் சில முக்கிய யோசனைகள் 2004 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு 1000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டிற்கும் 2006 ஆம் ஆண்டிற்கும் இடையில் ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர்களின் கொடுப்பனவு 500 ரூபாவால் அதிகரிப்பட்டுள்ளது.
இந்த கொடுப்பனவுகளின் அரைப்பகுதி ஜனவரி மாதம் முதல் வழங்கப்படவுள்ளதுடன், எஞ்சிய அரைவாசி ஜூலை மாதம் முதல்வழங்கப்படவுள்ளது.
படைவீரர்களின் குடும்பத்தின் மூன்றாவது பிரசவத்திற்கு வழங்கப்படும் ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவு ஜனவரி மாதம் முதல் பொலிஸாருக்கும் வழங்கப்படவுள்ளது.
பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்கும் குடும்பங்களுக்கு, உயிர்நீத்த இராணுவ வீரர்களின் பெற்றோருக்கும் மாதாந்தம் 750 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
70 வயதைக் கடந்த சிரேஷ்ட பிரஜைகளுக்காக வழங்கப்படும் 300 ரூபா கொடுப்பனவு, அடுத்த வருடம் முதல் 1000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
அங்கவீனமுற்ற குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதாந்தம் மூவாயிரம் ரூபா கொடுப்பனவும், ஏனைய காரணங்களினால் சிரமங்களை எதிர்கொள்ளும் நபர்களுக்கு மாதாந்தம் 500 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது.
210 ரூபாவிற்கும் 615 ரூபாவிற்கும் இடைப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவை 750 ரூபாவாக அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறைந்த வறுமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் 900 ரூபா சலுகைக் கொடுப்பனவு 1200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
திவிநெகும என்ற கிராமிய அபிவிருத்தி திணைக்களம் அடுத்த வருடம்முதல் ஸ்தாபிக்கப்பட உள்ளமையால் அனைத்து சமுர்த்தி ஊழியர்களுக்கும் அரசாங்க ஊழியர்களாக மாற்றப்படுவார்கள் எனவும், அத்துடன் அந்த சேவை வட பகுதிக்கும் விஸ்தரிக்கப்படும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், மற்றும் எழுத்தாளர்களுக்கு உதவுவதற்கான நிதியம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.
25 வருடகாலத்திற்கும் அதிகமாக ஊடகத்துறையில் சேவையாற்றிய ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் காரொன்றை கொள்வனவு செய்வதற்கு 12 இலட்சம் ரூபா வட்டியற்ற கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பினையும், உள்நாட்டு உற்பத்தியையும் மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு துறைசார் வரிகளை விதிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
750 பேர் புதிதாக விவசாய துறையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு உள்ளடக்கி நான்கு அரிசி ஏற்றுமதி வலயங்களை உருவாக்குவதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களை மேம்படுத்துவதற்காக பால்மா கொள்வனவின் போது விதிக்கப்படும் தீர்வை வரியை அதிகரிப்பதற்கும் இன்றைய வரவு - செலவுத் திட்டத்தில்
யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
காட்டு யானைகளின் தொல்லைகளால் பாதிக்கப்படும் மக்களின் நலன் கருதி காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலான வரி முறைமைகளில் திருத்தங்களை மேற்கொண்டு வருமானங்களை பெற்றுக்கொள்வதற்கான புதிய செயற்திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வாகனங்களைப் பதிவு செய்யும் போது அறவிடப்படும் வரியுடன் பதிவுக் கட்டணத்தையும் சேர்த்து வாகனப் பதிவிற்கான கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவும், சொகுசு வாகனங்களுக்கான வரியை அதிகரிப்பதற்கும் ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.
பயணிகளை ஏற்றிச் செல்வதற்கும், பொருட்களை கொண்டு செல்வதற்கும் பயன்படும் பஸ், லொறி மற்றும் உழவு இயந்திரங்களுக்கு பதிவுக் கட்டணம் அறவிடப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
No comments:
Post a Comment