Tuesday, November 29, 20112012 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவை சபாநாயகர் சமல் ராஜபக்ஸ இன்று வெளியிட்டார்.
எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் பதாதைகளை காட்சிப்படுத்தியதை அடுத்தே இந்த அமைதியின்மை ஏற்பட்டதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலைமை பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதிப்பதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு சிக்கல்களை தோற்றுவிப்பதாக அமைவதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் செயற்பாடுகள் விரும்பத்தகா வகையில் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தாமும், பிரதி சபாநாயகரும் மெற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் பிரதி அமைச்சர் சரண குணவர்த்தனவிற்கு ஒருவார காலம் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்தத் தீர்மானத்தினை சபை முதல்வர் பாராளுமன்றத்தில் முன்வைப்பார் என சபாநாயகர் குறிப்பிட்டார்.
இதன் பின்னர் பிரதி அமைச்சர் சரண குணவர்த்தன ஒருவார காலம் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு தடை விதிக்கும் பிரேரணை, சபை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்டது.
இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர், எதிர்க்கட்சியின் கொரடா ஜோன் அமரதுங்க அந்த தீர்ப்பை வரவேற்று கருத்து வெளியிட்டார்.
சபாநாயகரின் நடவடிக்கையை வரவேற்பதாகவும் இதன்போது எதிர்க்கட்சியின் பிரதம கொரடா குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment