Wednesday, November 02, 2011மதுரை: பாஜக மூத்த தலைவர் அத்வானியின் ரத யாத்திரை சென்ற பாதையில், பாலத்துக்குக் கீழ் பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் இமாம் அலியின் கூட்டாளிகள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரைத் தேடி வருவதாக சிபிசிஐடி கூடுதல் டிஜிபி சேகர் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.இவர் மதுரைக்கு வந்திருந்தபோது அங்கிருந்து திருமங்கலம் வழியாக நெல்லை மாவட்டத்திற்குப் பயணித்தார். அவர் செல்வதற்கு முன்பு, திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி தரைப் பாலத்துக்குக் கீழ் ஒரு 8 அடி நீளமுள்ள பைப்வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அத்வானியின் யாத்திரைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார், உளவுப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது இருவரைக் கைது செய்துள்ளதாக கூடுதல் டிஜிபி சேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அத்வானி ரதயாத்திரைப் பாதையில் பைப் வெடிகுண்டு வைத்தது தொடர்பான வழக்கில் மதுரையைச் சேர்ந்த அப்துல் ரகுமான் மற்றும் இஸ்மத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்ட இமாம் அலியின் கூட்டாளிகள் ஆவர்.
இவர்களில் ரகுமான் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இஸ்மத் ஆட்டோ ஓட்டுநர் ஆவார். இருவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இவர்கள் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது.
இதேபோல திருமங்கலத்தைச் சேர்ந்த உஸ்மான் அலி என்பவரும் சிக்கியுள்ளார். இவர் எலக்ட்ரீசியன் ஆவார். இவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
வழக்கில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களையும் தேடி வருகிறோம் என்றார் அவர்.
No comments:
Post a Comment