Sunday, November 6, 2011

ஈரோடு மாவட்டம் பவானி அருகே டேங்கர் லாரி மீது ஆம்னி பஸ் மோதி 2 வயது குழந்தை உள்பட 6 பேர் உடல் கருகி பலி!

Sunday, November 06, 2011
பவானி: ஈரோடு மாவட்டம் பவானி அருகே டேங்கர் லாரி மீது மோதி ஆம்னி பஸ் தீப்பிடித்ததில் 2 வயது குழந்தை உள்பட 6 பேர் உடல் கருகி பலியாயினர். தீக்காயமடைந்த பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இன்று அதிகாலை நடந்த இந்த கோர விபத்து, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூர் அடுத்த மடிவாலாவில் இருந்து படுக்கை வசதியுடன் கூடிய தனியார் ஆம்னி பஸ் நேற்றிரவு 10.25 மணிக்கு 34 பயணிகளுடன் கோவை புறப்பட்டது. பஸ்சை சேலம் தலைவாசலை சேர்ந்த சசிக்குமார் (29) ஓட்டி வந்தார். இந்த பஸ், இன்று அதிகாலை 5.25 மணிக்கு கோவை வந்தடைய வேண்டும். ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு சமத்துவபுரம்மேடு அருகே அதிகாலை 3.30 மணியளவில் வந்தபோது, முன்னால் சென்ற டேங்கர் லாரியை முந்திச்செல்ல பஸ் டிரைவர் முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் பின்பகுதியில் பஸ் பயங்கரமாக மோதியது.
டேங்கர் லாரியில் 20 ஆயிரம் லிட்டர் ஒயிட் பெட்ரோல் (விமான எரிபொருள்), தலா 5 ஆயிரம் லிட்டர் வீதம் நான்கு அறைகளில் அடைக்கப்பட்டிருந்தது. பஸ் மோதிய வேகத்தில் டேங்கர் லாரியின் ஒரு அறை மட்டும் உடைந்து பெட்ரோல் வெளியே கொட்டியது. பஸ்சின் முன்பகுதியிலும் பெட்ரோல் சிதறி திடீரென தீப்பிடித்தது. பஸ்சுக்குள் புகை பரவியது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள், புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அலறியடித்து எழுந்தனர். பஸ் முழுவதும் கரும்புகையாக இருந்தது. என்ன நடந்தது என்று சுதாரிப்பதற்குள் பஸ்சுக்குள் தீ மளமளவென பரவியது.
பயணிகளில் சிலர் பக்கவாட்டு கண்ணாடிகளை உடைத்து வெளியே குதித்து தப்பினர். அலறல் சத்தம் கேட்டதும் அப்பகுதி மக்கள் ஓடிவந்தனர். பஸ் எரிவதை பார்த்ததும் தீயணைப்பு படையினருக்கும், போலீ சாருக்கும் தகவல் தெரிவித்தனர். பவானி, ஈரோடு, பெருந்துறை ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பஸ்சில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தகவல் கிடைத்ததும் ஈரோடு கலெக்டர் சண்முகம், எஸ்.பி. பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். பஸ் டிரைவர் சசிக்குமார், இருக்கையில் அமர்ந்த நிலையிலேயே கருகிக் கிடந்தார். எலும்புக்கூடாக கருகிய பஸ்சில் இருந்து ஒரு பெண் மற்றும் 2 வயது குழந்தையின் உடல் கரிக்கட்டையாக மீட்கப்பட்டது. பஸ்சில் இருந்து இறங்கி தப்ப முயன்ற ஒரு பெண்ணும் ஆணும் வெளியே உடல்கருகிய நிலையில் சடலமாக கிடந்தனர்.
வெளியே சடலமாக கிடந்த பெண், மங்களூர் ஹாரிக்கரையை சேர்ந்த ஹேவல்சந்த் மனைவி கிரன்பாய் (55) என தெரியவந்தது. சேர்குழந்தை உள்பட மற்ற 3 பேரின் விவரம் கிடைக்கவில்லை. பஸ்சில் பயணம் செய்த ஒரு குழந்தை, 15 ஆண்கள், 6 பெண்கள் உள்பட 22 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு கோவை, ஈரோடு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்த்துள்ளனர். ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஹேவல்சந்த் (61), சிகிச்சை பயனின்றி இறந்தார். இதையடுத்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
விசாகபட்டினம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல மேலாளராக உள்ள கோவையை சேர்ந்த முத்துக்குமார் (45), கோவை ரத்தினபுரியில் ஓட்டல் நடத்தி வரும் இளவரசன்(44), மதுக்கரை குரும்பபாளையத்தை சேர்ந்த தினேஷ் பாலாஜி (25) ஆகியோர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கோவையில் உள்ள கம்ப்ரஸர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மகேஷ்குமார் (30), பரத் (31), அசாமை சேர்ந்த சினேகா (23), பெங்களூரை சேர்ந்த சீனிவாசன் (55), அவரது மகள் அஸ்வினி (21), ஜெயப்பிரகாஷ் புஜார் (49), அவரது மனைவி வனிதா புஜார், மகள் ரிதிபுஜா, மகன் சித்தன்புஜா, சேர்ந்த ராஜேஷ்குமார் (40), அவரது மனைவி மதுகாஞ்சனா (36), மகன் பிரணவராம்(4), பஸ் கிளீனர் சேலம் வண்ணாத்திபட்டியை சேர்ந்த சசிக்குமார் (22), சித்தார்த்தன் (19), கலைவாணி, கோவிந்தராஜ், மற்றொரு பரத், ஸ்ரீகாந்த் ஆகியோர் லேசான காயங்களுடன் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள். விபத்தில் இருந்து தப்பிய கோவை ரேஸ்கோர்சை சேர்ந்த விவேக் சீத்தாராமன் (28) கூறுகையில், ‘‘பெங்களூரில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ளேன். பஸ்சில் தூங்கிக் கொண்டிருந்தேன். திடீரென ஏதோ மோதியதுபோல சத்தம் கேட்டு விழித்தேன். பஸ்சின் முன்பகுதி தீப்பிடித்து எரிவதை பார்த்ததும் மற்றவர்களை எழுப்பினேன். பக்கவாட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வெளியே குதித்து தப்பினோம். உடமைகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகி விட்டன’’ என கதறினார்.
சென்னையில் கோழிப்பண்ணை மற்றும் மாட்டுக்கறி வியாபாரம் செய்துவரும் வியாபாரி ரங்கராஜன் (52) கூறுகையில், ‘‘பஸ்சில் தீ எரிவதை பார்த்ததும் உடனடியாக ஜன்னல் வழியாக வெளியே குதித்து தப்பிவிட்டேன். ஜன்னல் வழியாக வெளியேற முயன்றவர்களை இழுத்து காப்பாற்றினோம். நான் எடுத்து வந்த ரூ.75 ஆயிரம் தீயில் எரிந்து விட்டது. உயிர் பிழைத்ததே கடவுளின் செயல்’’ என்றார்.
கருகிய புல்வெளிகள்
டேங்கரில் இருந்து சிதறிய ஒயிட் பெட்ரோல் சாலையோரம் வழிந்தோடியது. அதிலும் தீ பிடித்ததால் சாலையோரம் இருந்த புற்கள் கருகின. பெட்ரோல் சிதறிக் கிடந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு ரோடு வழுக்கியது. போலீசார் ரோட்டில் மணலை கொட்டி ஓரளவு சரிசெய்தனர். பெருந்துறை சிப்காட் பகுதியில் இருந்து ஆயிலை உறிஞ்சி எடுக்கும் ரசாயன பொடி கொண்டு வரப்பட்டு ரோட்டில் தூவப்பட்டது.

No comments:

Post a Comment