Saturday, November 5, 2011

வடமராட்சி படைத்தரப்பின் வசமுள்ள 115 வீடுகளை மீளவும் பெற விரைவில் நடவடிக்கை-டக்ளஸ் தேவானந்தா!

Saturday, November 05, 2011
பொலிகண்டி நிலவன் குடியிருப்பில் வாழும் மக்களின் நலன்கருதி அங்கு உடனடியாக தற்காலிக மின்னிணைப்பை வழங்குமாறு இலங்கை மின்சார சபைக்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை வழங்கினார்.

வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பருத்தித்துறை வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்புத் தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஈடுபடும் நபர்கள் மீது பொலிஸார் உடன் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவரை நீதிமன்றில் ஒப்படைக்க வேண்டுமென்றும் பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கினார்.

அத்துடன் குறித்த பிரதேச செயலர் பிரிவின் கீழ் படைத்தரப்பின் வசமுள்ள 115 வீடுகளை மீளவும் பெற்றுத் தருவதற்கு இராணுவத் தளபதியிடம் தொடர்பு கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் உறுதிமொழி வழங்கினார்.

இந்தியாவிலிருந்து மீளவும் தமது பகுதிகளில் மீள்குடியமர்ந்து வரும் மக்களுக்கு விசேட திட்டத்தினூடாக உதவித் திட்டங்கள் வழங்கப்படுவதற்கேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்த அமைச்சர், பொலிகண்டிப் பகுதியிலுள்ள நிலவன் குடியிருப்புக்கு உடனடியாக தற்காலிக மின்னிணைப்பை வழங்குமாறு மின்சார சபைக்கு பணிப்புரை விடுத்தார்.

பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை, பிரதேச சபைப் பகுதிகளிலுள்ள குப்பை கூழங்களை அகற்றுவது தொடர்பில் உறுதியானதும் இறுதியானதுமான முடிவுகைள எடுத்து செயற்படுத்த வேண்டுமெனவும், பொதுமக்களுக்கு எவ்விதத்திலும் இடையூறு ஏற்படாத வகையில் குப்பைகளை அகற்ற வேண்டுமெனவும், தற்காலிக ஏற்பாடாக, கரவெட்டி பிரதேச சபைக்கு தலா 250 ரூபா வீதம் செலுத்தி குப்பைகளை அகற்றுமாறும் குறிப்பிட்ட சபைத் தலைவர்களுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் மேற்கொள்ளப்படக் கூடிய பயிர்ச்செய்கை தொடர்பில், விவசாயத் திணைக்களம் றே;கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தறிந்து கொண்ட அமைச்சர் அவர்கள் மானிய அடிப்படையில் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் விடயத்திலும் கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

அப்பகுதிக்கான அரச மற்றும் தனியார் பேரூந்துகளின் சேவைகள், அவற்றின் விஸ்தரிப்பு, வேகக் கட்டுப்பாடு போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.

இன்றைய கூட்டத்தின் போது ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்), பிரதேச செயலர் வரதீஸ்வரன், பொலிஸ் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அரச திணைக்களின் துறைசார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment