Wednesday, November 2, 2011

ஊட்டி அருகே பயங்கரம் : 100 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது!

Wednesday, November 02, 2011
குன்னூர் : ஊட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி 100 அடி பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்ததில் பெண் பலியானார். 11 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த கேத்தி பாலாடா கிராமத்தை சேர்ந்த 20 தொழிலாளர்கள் நேற்று காலை 6.30 மணியளவில் ஊட்டி அடுத்த பிக்கோல் கிராமத்துக்கு கேரட் அறுவடை பணிக்காக லாரியில் சென்றுகொண்டிருந்தனர். காலை 7 மணியளவில் அதிகரட்டி அருகே வளைவில் லாரி, கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் சாய்ந்தது. சுதாரித்த தொழிலாளர்களில் சிலர் லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பினர்.

மற்றவர்கள் தப்பிக்க முயற்சிப்பதற்குள் லாரி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது. லாரியின் அடியில் சிக்கி துரை என்பவரின் மனைவி சாந்தி(40) பரிதாபமாக இறந்தார். 11 பேர் லாரியின் அடியில் சிக்கி படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த குன்னூர் டிஎஸ்பி மாடசாமி தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றவர்கள் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment