Sunday, October 30, 2011

புலிகள் இருந்த காலத்தில் பேசியது போன்று வீரவசனங்களைப் பேசி விதண்டாவாத
அறிக்கைகளை மட்டுமே விட்டுவரும் தமிழ்க் கூட்டமைப்பு:அமெரிக்காவீல் தமிழர் பிரச்சினையை எடுத்துக் கூறி நீதி கேட்பது ஒருபுறமிருக்க இங்கு வந்து அரசுடன் பேசி ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்து ஒன்றுபட்டு வாழ்வதே சிறப்பாக அமையும்!

Sunday, October 30, 2011
நாட்டில் புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு கடந்த முப்பது வருடகாலத்தில் பல்வேறு கோணங்களில் தீர்வுகளைக் காண முற்பட்ட போதிலும் இன்றுவரை அதற்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை. மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் ஏதோவொரு வகையில் அதனைத் தட்டிக்கழித்து வந்துள்ளமையே வரலாற்றுப் பதிவுகளாக உள்ளன.

அதேபோன்று வட்டுக்கோட்டைத் தீர்மானம் முதல் புலிகளைத் தோற்றுவித்து முள்ளிவாய்க்காலில் அவர்கள் முடங்கிப் போகும்வரை தமிழ் அரசியல்வாதிகளும் தீர்வினை ஆயுதம் மூலமாகக் காணலாம் எனும் நம்பிக்கையில் இருந்துவந்ததையும் மறுப்பதற்கில்லை.

இந்நிலையில் சமாதானம் மூலமாகவும் பின்னர் யுத்தம் மூலமாகவும் முடிவிற்கு வராத தீர்வு காணும் விடயம் இன்று அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை மூலமாக வரும் என்பதே தமிழர் தரப்பினதும், தமிழ் மக்களினதும் இறுதி எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆனால் அதிலும் எத்தனை இழுபறி? விட்டுக்கொடுக்காத் தன்மை, புறம் சொல்லும் பண்பு, மறைமுக வசைபாடல் என்று காலம் கடத்தும் கபடத்தனங்கள் அரங்கேறி வருகின்றன. வெறுப்படைந்தாலும் மக்களால் எதுவுமே செய்ய முடியாது. நடப்பதைக் காண வேண்டியதுதான் என்பது தமிழ் மக்களது தலை எழுத்தாக அமைந்துள்ளது.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவுக்கு நீதி கேட்டுச் சென்றுள்ளது. அமெரிக்கா உலகுக்கே பொலிஸ்காரன் வேலை பார்க்கும் பெரிய வல்லரசு. இலங்கைத் தமிழருக்கு நிச்சயம் வழியொன்று சொல்லும் என்பது பலரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

அமெரிக்காவிற்கு நாம் செல்வது அரசாங்கத்தைக் குறை கூறுவதற்காக அல்ல. மாறாக தமிழர் பிரச்சினையை எடுத்துக் கூறுவது மட்டுமே எமது செயற்பாடாக அமையும் என கூட்டமைப்பினர் தெரிவித்திருப்பது அவர்களது பெருந்தன்மையைக் காட்டுகிறது. ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அல்லது ஜே.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்க போன்று வெளிநாட்டவருக்கு அரசைக் காட்டிக் கொடுப்பதிலிருந்து விலகி தமிழ்க் கூட்டமைப்பு உயர்ந்துள்ளது.

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் தாக்கங்கள் தமிழர் மனங்களிலிருந்து மாறாத நிலையில் அதனைச் சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவதில் தமிழ்க் கூட்டமைப்பு குறியாகவே உள்ளது. நடந்த உண்மைகளை மூடி மறைத்தாலும் தனது மக்களின் மனக்குமுறலுக்கும், அவலக் குரலுக்கும் கூட்டமைப்பு செவிமடுத்துச் செயற்படுவதில் எவ்விதத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.

உள்ளூரில் பேச்சுவார்த்தையை நடத்தி இனப்பிரச்சினைக்குத் தீர்வினைக் காண்பதை ஏற்றுக் கொண்டாலும் அதற்குச் சர்வதேசங்களின் அனுசரணையையும், மேற்பார்வை மற்றும் பங்குபற்றுதல்களை தமிழ்க் கூட்டமைப்பு விரும்புகிறது என்பது அவர்களது செயற்பாடுகளிலிருந்து நன்கு புலனாகிறது.

இது தவறல்ல. தவறு என்று எவராலும் கூறவும் முடியாது. காரணம் தமிழ்த்தரப்பு கடந்த காலங்களில் கண்ட அனுபவங்கள் யாவும் ஏமாற்றப்பட்ட வரலாறுகளாகவே உள்ளன. அதனால்தான் தமிழ்க் கூட்டமைப்பின் முரண்டுபிடிப்பு வலுவான எச்சரிக்கையாக உள்ளது.

எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் அவர்கள் இத்தகைய மனப்பயமின்றி இதய சுத்தியுடன் பேசலாம் என்பதைப் புரிந்து கொள்ளாமை வேதனை தருவதாக உள்ளது. ஜனாதிபதி துணிந்து பல விடயங்களைச் செய்து சாதித்துள்ளார் என்பதை கூட்டமைப்பு உணரவேண்டும்.

அமெரிக்கா செல்லும் அவர்கள் அங்கு தமிழர் பிரச்சினையை எடுத்துக் கூறி நீதி கேட்பது ஒருபுறமிருக்க இங்கு வந்து அரசுடன் பேசி ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்து ஒன்றுபட்டு வாழ்வதே சிறப்பாக அமையும்.

உதட்டளவில் தமிழ்த் தேசியம் பற்றிப் பேசி வரும் சிலர் உள்ளத்தால் அரசாங்கத்துடன் இணைந்து சென்று தமிழ் மக்களுக்கு விமோசனத்தைப் பெறுவதையே தமிழ்க் கட்சிகள் மேற்கொள்ள வேண்டுமெனும் விருப்புக் கொண்டுள்ளமையை தற்போது உணர முடிகிறது. இதற்குக் காரணம் புலிகளின் அழிவிற்குப் பின்னரும் தமிழ்த் தேசியம், தமிbழம் பற்றிப் பேசுவதில் எவ்விதமான அர்த்தமும் இல்லை என்பதை நன்கு புரிந்துகொண்டமையே.

அத்துடன் புலிகள் இல்லாது போன தன் பின்னர் அவர்களது இடத்தில் வைத்து தமிழ் மக்களால் மதிக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இன்று தடம்மாறிப் பயணிக்கப் புறப்பட்டமை தமிழருக்கு ஒரு சாபக்கேடு என்றே கூறவேண்டும்.

புலிகள் இருந்த காலத்தில் பேசியது போன்று வீரவசனங்களைப் பேசி, விதண்டாவாத அறிக்கைகளை மட்டுமே விட்டுவரும் தமிழ்க் கூட்டமைப்பு, அரசுடன் ஆக்கபூர்வமாகப் பேச்சுக்களை நடத்தி அணைந்து சென்றால் பல வெற்றிகளைக் காணலாம் என்பது தமிழ் மக்களது தற்போதைய கருத்தாக எழுந்துள்ளது.

வடக்கு கிழக்கில் அரசாங்கம் மேற்கொள் ளும் ஒவ்வொரு அபிவிருத்திப் பணிகளை யும் விமர்சிப்பதுவும், பேச்சுவார்த்தை நடத் துவதும் கூட்டமைப்பின் இப்போதைய நிகழ்ச்சி நிரலாக உள்ளது. இதனை விடுத்து அபிவிருத்திப் பணிகளில் அரசு டன் தானும் கைகோர்த்து செயற்பட்டால் அர சிடமிருந்து மேலும் பலவற்றைக் கேட்டுப் பெறலாம் என்பதை தமிழ்க் கூட்டமைப்பு விளங்கிக் கொள்வதாக இல்லை.

சர்வதேசத்திடம் சென்று அரசாங்கத்தைப் பற்றிக் குறைகூறுவதை விடுத்து இங்கு அரசுடன் உண்மையுடன் பேசி தீர்வைக் காண்பதே மேலானது என்பதை ஏன் தமிழ்க் கூட்டமைப்பு இன்னமும் புரிந்து கொள் ளாமலுள்ளது என் பது கேள்விக்குறியாகவே உள்ளது. புலிகளின் மறைவிற்குப் பின்ன ரும் இதனை விளங்காதிருப்பது தமிழ் மக்களிடையே ஆச்சரியத் தையே தோற்று வித்துள்ளது.

இதுவரை காலமும் தமக்கிடையே ஓரளவு ஒற்றுமையைக் கடைப்பிடித்து வந்த தமிழ்க் கூட்டமைப்பு இப்போது பிரிந்து செயற்பட ஆரம்பித்துள்ளது. அதில் பல குழுக்கள் ஏற்பட்டுள்ளன. அக்குழுக்கள் சேர்ந்து கூட்டணிகளையும் அமைத்துள்ளன. அதிலும் ஆனந்தசங்கரி ஐயாவினுடைய கூட்டணி தமிழ்க் கூட்டமைப்பின் தலைமைக்குப் பெரும் தலையிடியாக அமைந்துள்ளது.

இவ்வாறு தமக்குள்ளே மோதி மேலும் பல பிரிவுகள் ஏற்பட்டு பிளவுபட்டுச் செயற்படுவதை விடுத்து ஓரளவு ஒற்றுமை யாக இருக்கும் இச்சந்தர்ப்பத்திலாவது அர சாங்கத்துடன் பேச்சு நடத்தி ஒரு நல்ல தீர்வினைக் காண்பது உசிதமானது. ஆனால் தமிழ்க் கூட்டமைப்பின் தலைமை இதனைப் புரிந்து கொள்வதாக இல்லை.

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களில் பெரும்பாலானோர் தம்மையே ஆதரிக்கிறார்கள் எனும் மமதையில் அம்மக்களின் கருத்துக்களுக்குக் கூடச் செவி சாய்க்காது தமதிஷ்டப்படி தமிழ்க் கூட்டமைப்பின் தலைமை நடந்து வருகிறது. வடக்கு கிழக்கில் பல உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியை மக்கள் இவர்களுக்கு வழங்கியிருந்தாலும் அவற்றைச் சிறந்த முறையில் நிர்வகிக்கும் திறமையற்றவர்களாகவே இவர்கள் காணப்படுகிறார்கள். நாட்டிலுள்ள ஏனைய உள்ளூராட்சிச் சபைகள் தமது பணிகளை முன்னெடுத்து மக்களுக்குச் சேவையாற்றி வருகின்றன. ஆனால் இவர்களால் கைப்பற்றப்பட்ட சபைகளிலோ இன்னமும் தலைவரை, தவிசாளரைத் தெரிவு செய்வதில் காணப்படும் பிணக்குகள் முடிவிற்கு வரவில்லை. இந்நிலையில் இவர்களிடம் வடக்கு மாகாண சபையையும் கொடுத்தால் நிலைமை எப்படியிருக்கும்?

எனவே தமிழ்க் கூட்டமைப்பு தனக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றாது சேவையாற்ற வேண்டும். அதற்கு அரசுடன் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும். அரசுடன் இணைந்து செயற்படுவதால் ஒருபோதும் கெளரவம் குறைந்துவிடாது மாறாக இதுவரை காலமும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமோசனமே கிடைக்கும்.

No comments:

Post a Comment