Friday, October 7, 2011

மக்களின் அச்சம் தீரும்வரை கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படாது!.

Friday, October 07, 2011
புதுடெல்லி: கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னைக்கு தீர்வு காண உயர்நிலைக்குழு அமைக்கப்படும் என்று தன்னை சந்தித்த தமிழக குழுவினரிடம் பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்தார். நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி இடிந்தகரை கிராமத்தில் 12 நாள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா, போராட்ட குழுவினரை சென்னைக்கு அழைத்து பேசினார். ‘கூடங்குளம் அணுமின் நிலையம் பிரச்னை குறித்து தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், போராட்ட குழுவினர் டெல்லிக்கு சென்று பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும்’ உறுதி அளித்தார். இதை ஏற்று, உண்ணாவிரத போராட் டம் முடிவுக்கு வந்தது.

பின்னர் தமிழக அமைச்சரவையில், ‘மக்கள் அச்சம் நீங்கும் வரை கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக எம்பிக்கள் தம்பிதுரை, மைத்ரேயன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் அடங்கிய அரசு குழுவும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள போராட்ட குழு அமைப்பாளர் உதயகுமார் தலைமையிலான ஒரு குழுவும் இணைந்து நேற்று மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி சென்றன.

டெல்லியில் இன்று மதியம் பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழக அரசு குழு மற்றும் போராட்ட குழுவினர் இணைந்து சந்தித்தனர். இந்த குழுவில் மொத்தம் 22 பேர் இருந்தனர். தமிழக அரசு சார்பில் ஓ.பன்னிர்செல்வம் ஒரு மனு அளித்தார். மனுக்களை பெற்றுக் கொண்ட பிரதமர், இந்தப் பிரச்னை தொடர்பாக ஆலோசித்து தீர்வு காண்பதற்காக உயர்நிலைக்குழு ஒன்றை அமைப்பதாக உறுதி அளித்தார். இந்த தகவலை, தமிழக அரசு குழுவில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.

உயர்நிலைக்குழு, அணுமின் நிலையத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்றும் அதனடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment