Thursday, October 06, 2011சமீபத்திய அரசாங்கப் புள்ளிவிவரக் கணக்கின்படி மட்டக்களப்பு மாவட்டம் மிகவும் வறுமையான மாவட்டமாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது.
இருந்தும் முல்லைத்தீவு வவுனியா கிளிநொச்சி மாவட்டங்கள் இந்தப் புள்ளி விவரத்தில் உள்வாங்கப் படாதபடியால் எதிர்வரும் காலங்களிலே மட்டக்களப்பு மாவட்டம் மிகவும் வறுமையான மாவட்டம் என்ற கணிப்பு மாற்றமடையக் கூடும்.
இருந்தாலும் மட்டக்களப்பில் 20.5 வீதமான மக்கள் தற்போது வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றார்கள் என்று சொன்னால் அதுவொரு பாரிய பிரச்சினையாகக் கொள்ளப்பட வேண்டும். ஆறு இலட்சம் சனத்தொகையைக் கொண்ட இந்த மாவட்டத்திலே 20.5 வீதமானோர் வறுமைக்குள் உளலுகிறார்கள் என்பது கவலைக்குரியது.’
இவ்வாறு தகவல் வெளியிட்டார் இலங்கை மத்திய வங்கியின் வறுமை ஒழிப்பு நுண்பாக நிதியளிப்புச் செயற்திட்டத்தின் தலைவரும் ஆலோசகருமான திரு. ஆர். சிறிபத்மநாதன் அவர்கள் கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல கிராமப் புறங்களுக்கும் விஜயம் செய்து அங்கு மக்கள் சக்திச் சங்கங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வுகளில் பங்கு கொள்ளும்போது அவர் வறிய மக்கள் மத்தியில் விளக்கமளித்தார்.
’2009 ம் ஆண்டு வறுமை ஒழிப்புக்கான கடன் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலே முதன்முதலாக அறிமுகப்படுத்தப் பட்டது. அப்பொழுதிருந்து இன்றுவரை நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற ஆயிரக்கணக்கான குடும்பங்களை இந்தத் திட்டத்தின் கீழ் உள்வாங்கியிருக்கின்றோம். பல வங்கிகள் மூலம் பல விதமான கடன்களையெல்லாம் வழங்கியிருக்கின்றோம். ஜப்பானிய நிறுவனத்தினுடைய ஆய்வறிக்கையின்படி அவர்களுடைய வாழ்க்கைத் தரம் மிகவும் வெற்றிகரமாக இருக்கிறதென்பதை எமக்குக் கூறியிருந்தார்கள். இருந்தாலும் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.
முக்கியமாக இது வறுமை ஒழிப்புக்கான கடன் திட்டமாக இருந்தாலும் வருமானம் குறைந்த மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கான திட்டம் என்றுதான் கூறுகின்றோம்.
அதேவேளை இந்தத் திட்டத்தின் கீழ் முற்று முழுவதுமாக வறுமையை ஒழித்து விடலாம் என்று நாங்கள் ஒருபோதும் கூறுவதும் கிடையாது. அத்தகைய அபரிமிதமான நம்பிக்கையை நாங்கள் வளர்ப்பதுமில்லை.
இந்தவொரு திட்டத்தின் மூலம் இலங்கையிலுள்ள வறுமையை முற்று முழுவதுமாக ஒழித்து விடலாம் என்று அரசும் நம்பியது கிடையாது. இது அரசின் திட்டத்தில் ஒரு பகுதிதான். இதைத்தவிர அரசின் வறுமை ஒழிப்புக்கான செயற்பாடுகள் பல்வேறு மட்டங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வேறு வேறு திட்டங்கள் இருக்கின்றன.
இலங்கை அரசு மாத்திரமல்ல உலக நாடுகளில் ஒப்புக் கொள்ளப்பட்ட விடயம், 2015 ம் ஆண்டளவில் வறுமையை சரிபாதியாகக் குறைத்து விடலாம் என்று 2004 ம் ஆண்டு 149 நாடுகள் ஐக்கிய நாடுகள் சாசனத்திலே கையெழுத்திட்டன. இலங்கையும் கைச்சாத்திட்ட நாடுகளில் ஒன்று.
இந்த நாட்டிலே வறுமை ஒழிக்கப் படவேண்டும் என்பதற்கான முக்கியமான காரணம் சமாதானம் ஏற்பட வேண்டும். ஒரு நாட்டின் உண்மையான சமாதானம் அந்த நாட்டிலுள்ள வறுமை ஒழிப்பதனைக் கொண்டுதான் அடைய முடியும்.
யுத்தம் முடிவடைந்து விட்டது ஆகவே இந்த நாட்டிலே சமாதானம் ஏற்பட்டு விட்டது என்று யாராலுமே கூறிவிடமுடியாது. ஏனென்றால் உங்களுக்குத் தெரியும் பலவிதமான பிரச்சினைகள் பலவிதமான சட்ட விரோதமான செயல்களெல்லாம் நாட்டிலே நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணத்தை ஆராய்ந்தால், அவற்றுக்கெல்லாம் வறுமைதான் காரணம்.
இலங்கையைப் பொறுத்தமட்டிலே ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது பொதுவாக ஆசியாவை வறுமையின் இல்லம் என்று அழைப்பார்கள். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இலங்கையிலுள்ள வறுமை 8.9 வீதம்தான் காணப்படுகிறது. அண்டைய நாடான இந்தியா வங்காளதேசத்திலே வறுமை 20 சத வீதமும் எதியோப்பியாவிலே சோமாலியா 80 வீதமும் ஆப்கானிஸ்தானிலே 60 வீதமான மக்களும் உலக நாடுகளில் எங்கெல்லாம் பிரச்சினை அதிகமாக இருக்கின்றதோ அங்கெல்லாம் வறுமைதான் தாண்டவமாடுகிறது.
நோர்வே சுவிற்சர்லாந்து ஜேர்மன் போன்ற நாடுகளைப் பார்த்தால் அங்கே வறுமையும் இல்லை ஆதலினால் பிரச்சினைகளும் இல்லை. ஆகையினால்தான் எங்களுடைய ஜனாதிபதி கூட இந்த நாட்டிலே சமாதானம் எழவேண்டுமாக இருந்தால் வறுமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் ஜப்பானிய உதவித் திட்டத்தின் கீழ் இந்தக் கடன் திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.
இலங்கையில் 14 மாவட்டங்களிலே அதிகம் வறுமையான மாவட்டங்களைத் தெரிவு செய்துதான் இந்தத் திட்டம் அமுல் படுத்தப்படுகின்றது. கொழும்பு உட்பட ஏனைய மாவட்டங்களிலும் இதனை அமுல்படுத்துகின்றோம். கொழும்பில் என்ன வறுமை இருக்கிறது என்று ஆச்சரியப்படாலம். அங்கு 3.9 வீதமானவர்கள் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்கின்றார்கள், Urban Poor. ஆகவே எல்லா இடங்களிலும் வறுமையான மக்கள் இருக்கின்றார்கள்.
வடக்கு கிழக்கிலே ஏற்பட்டிருந்த மூன்று தசாப்த கால யுத்தம் காரணமாக கூடுதலான மக்கள் வறுமைக்குள்ளாகி இருக்கின்றார்கள். அவர்கள் வாழ்விடங்களையும் சொத்துக்களையும் தொழில் வாய்ப்புக்களையும் இழந்தபடியால் கூடுதலான வறுமை வாட்டி நிற்கின்றது.
எங்களுடைய திட்டத்தில் இணைக்கப்பட்டவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்ற மக்களும், வறுமையான மக்களும் மாத்திரம்தான். இந்த மக்களை எப்படித் தெரிவு செய்வதென்பது நாங்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினையாகும். நாங்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று யார் வறுமை என்று தெரிவு செய்யக்கூடிய நிலையில் இல்லை. பிரதேச செயலாளர்களிடமும் உதவி அரசாங்க அதிபர்களிடமும் புள்ளி விவரங்கள் இருக்கின்றன. இருந்தாலும் வங்கிகள் போய் இவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்று தெரிவு காண்பதில் பல பிரச்சினைகள் எழுகின்றன. எனினும் நாம் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கேற்ப இவர்கள் தான் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்கள் இவர்களைத்தான் நீங்கள் தெரிவு செய்ய வேண்டும், இவர்களுக்குத்தான் இந்தத் திட்டத்தின் மூலம் உதவி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வழங்கியிருக்கின்றோம்.
ஆகவே, வருமானம் குறைந்த நீங்கள் தங்களுடைய வருமானத்தை அதிகரித்து வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றி ஒரு நடுத்தர வர்க்கமாக சகல விதமான அடிப்படை வசதிகளுடனும் வாழ வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தினதும் இந்தத் திட்டத்திற்கு நிதியளிக்கும் ஜப்பானிய அரசினதும் நோக்கமாக இருக்கின்றது.
அனைத்து அடிப்படை வசதிகளுடனும் நீங்கள் வாழ வேண்டும் என்று விரும்பினால் உங்களுடைய வருமானங்களை அதிகரித்தாக வேண்டும். தற்போதுள்ள வருமானம் உங்களுக்குப் போதாது. ஆகவே வருமானம் அதிகரிக்க வேண்டும் என்றால் வருமானம் ஈட்டக்கூடிய தொழில் முயற்சிகளில் நீங்கள் ஈடுபடவேண்டும்.
ஒரு தொழில் முயற்சியல்ல, பலவிதமான தொழில் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இந்தத் தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முக்கியமான தேவையாக இருப்பது நிதி. வங்கியிலிருந்து நிதியைப் பெற்றுக் கொள்ளலாம் ஆனால் அது இலேசாகச் சாத்தியப் படக்கூடிய விடயமல்ல. ஆரம்ப கால கட்டத்தில் எந்த வங்கியுமே உங்களைப் போன்ற வறிய மக்களுக்கு உதவுவதில் தயக்கம் காட்டின. ஏனென்றால் உங்களைப் போன்ற மக்களுக்கு வங்கியினுடைய செயற்பாடுகளைப் பற்றி எந்த விதமான அறிவும் இருந்திருக்க வில்லை.
பொதுவாகவே மக்கள் வங்கி, இலங்கை வங்கி என்று சொன்னால் அரசாங்கத்தினுடைய பணத்தைத்தான் இவர்கள் கொடுக்கின்றார்கள் என்று வறிய மக்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள். கடந்த காலங்களிலே இந்த வங்கிகளிலே பெற்ற கடன்களையெல்லாம் மக்கள் திருப்பிச் செலுத்தாததற்குக் காரணம் அரசாங்கத்துடைய பணம் ஆகவே இதனை நாங்கள் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை என்று மக்கள் நம்பினார்கள். அதன் காரணமாகத்தான் வங்கிகள் உங்களை ஏறிட்டும் பார்க்கவில்லை. ஆகவே அதிகரித்த வட்டிக்குத்தான் நீங்கள் பணம் வாங்க வேண்டியிருந்தது. சமீபத்தில் ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தோம் அங்கே ஒரு கிழமைக்கு 20 சத வீத வட்டிக்கு மக்கள் கடன் வாங்கியிருந்தார்கள்.
இலங்கையில் 37 வகையான வெவ்வேறு வங்கிகள் நாலாயிரத்திற்கு மேற்பட்ட கிளைகளுடன் நாடளாவிய ரீதியில் இயங்கி வருகின்றன. ஆயினும் இலங்கையின் சனத்தொகையில் 60 சதவீதமான மக்கள்தான் வங்கிச் சேவையைப் பெறுகின்றார்கள். ஏனையோருக்குக் கைகொடுப்பது வட்டிக்குப் பணம் கொடுப்போர்தான்.
இந்த வறுமை ஒழிப்புத்திட்டத்தில் நீங்கள் தனியாக இருந்து செயற்பட முடியாது. சிறு சிறு துரும்புகளாக நீங்கள் சிதறியிருக்கும்போது ஒருபோதுமே உங்களால் முன்னேறிவிட முடியாது. ஆகவேதான் உங்களை நாங்கள் குழுக்களாக அமைத்தோம்.
இது சுய உதவிக் குழு அல்லது சகோதரக்குழு. ஒட்டுமொத்தமாக வருமானங் குறைந்த நிலையிலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக குழக்களாக இணைந்து செயலாற்றினால் இந்தத் திட்டத்தின் மூலம் உண்மையான பயனைப் பெற்று நீங்களும் சமூகமும் நாடும் முன்னேறலாம்.
சமூக ஒன்று திரட்டல் மூலம்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். இது வறுமைக்குட்பட்ட உலக நாடுகளிலே வெற்றியளித்திருக்கிறது. வங்காள தேசத்திலே உள்ள பெண்கள் இதனைச் சாதித்துக் காட்டியிருக்கின்றார்கள். இன்று உலகில் 101 நாடுகள் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக அமுல் படுத்திக் கொண்டிருக்கின்றன.
2002 ம் ஆண்டு தென்னிலங்கையில் ஆறு மாவட்டங்களில் ஆரம்பிக்கப் பட்டு மிகவும் வெற்றி கரமான முறையில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. அவர்கள் இன்று 147 வங்கிச் சங்கங்களைச் செயற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்தக் கடன் திட்டத்தினை நாங்கள் 2008 ம் ஆண்டு ஆரம்பித்தோம் ஒரு இலட்சத்துப் பதினோராயிரம் குடும்பங்கள் தற்போது உள்வாங்கப்பட்டிருக்கிறார்கள். 1300 மில்லியன் ரூபாய்க்கு மேற்பட்ட கடன்களை வழங்கியிருக்கின்றோம். வங்கிகளிலே மக்களுடைய சேமிப்பு 1900 மில்லியன் ரூபாய்கள் வைப்பாக இருக்கின்றன. கடனை விடக் கூடுதலாக மக்களிடம் சேமிப்பு இருக்கின்றது. தாங்கள் வாழ்க்கையில் எப்படியும் முன்னேறவேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பதையே இது காட்டுகிறது. இதுவரையும் 444 மக்கள் சக்திச் சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது 445 வது சங்கமாகும். வறுமையிலிருந்து நீங்கள் மீண்டௌ வேண்டும்.
இது சுதந்திரமாக யாருடைய கட்டுப்படுத்தலுக்கும் உள்ளாக முடியாத சுதந்திர மக்கள் சக்தி அமைப்பு . நாளடைவில் இது மக்கள் வங்கியின், மக்களின் காலடியில் பணியாற்றும் ஒரு வங்கியாகச் செயற்படும்.
No comments:
Post a Comment