Tuesday, October 25, 2011ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக அவுஸ்திரேலிய நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சிட்னி மோர்னிங் ஹரால்ட் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்றுக் கொண்ட அருணாச்சலம் ஜெகதீஸ்வரன் என்ற நபரே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாடசாலைகள், வைத்தியசாலைகள், அநாதை இல்லங்கள், மக்கள் குடியிருப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைகள் மீது அரசாங்கப் படையினர் வான் மற்றும் தரைவழித் தாக்குதல்களை நடத்தியதாகவும் இதனால் ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேர்த்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்றைய தினம் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
முப்படைகளின் தளபதி என்ற ரீதியில் ஜனாதிபதி இந்தக் குற்றச் செயல்களக்கு பொறுப்பு சொல்ல வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 29ம் திகதி நடைபெறவுள்ளது.
ஜெகதீஸ்வரன் 1987ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தன்னார்வ தொண்டராக பணியாற்றியதாகவும் குறித்த சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதனை நேரடியாக கண்டதாகவும் ஜெகதீஸ்வரன் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment