Thursday, October 13, 2011

உக்ரைன் தலைநகர் கீவ்வில் யூரோ கால்பந்து போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து மேலாடையின்றி ஆர்ப்பாட்டம் : கல்லூரி மாணவிகள் கைது!

Thursday, October 13, 2011
கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ்வில் யூரோ கால்பந்து போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து டாப்லெஸ் போராட்டம் நடத்திய பெண்கள், கல்லூரி மாணவிகள் கைது செய்யப்பட்டனர். ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் (யூரோ-2012) இறுதி சுற்று போட்டிகள் போலந்து மற்றும் உக்ரைன் நாட்டில் அடுத்த ஆண்டு ஜூன், ஜூலையில் நடக்கின்றன. இதில் சில போட்டிகள் உக்ரைன் தலைநகர் கீவ்வில் நடக்கிறது. இதற்காக ரூ.2,600 கோடி செலவில் ஒலிம்பிஸ்கி தேசிய விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது. இதன் துவக்க விழா கடந்த 8-ம் தேதி நடந்தது. வண்ணமயமான வாண வேடிக்கைகளுடன் தொடங்கிய விழாவில் கொலம்பிய பாப் பாடகி ஷகிரா இசை நிகழ்ச்சி நடத்தினார். 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், அரங்கத்தின் வாசலில் ‘ஃபிமன்’ என்ற மகளிர் அமைப்பை சேர்ந்த பெண்கள், கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ‘‘கால்பந்து போட்டியை நடத்துவதன் மூலமாக, மறைமுகமாக விபசார தொழிலை அதிகப்படுத்த முயற்சி நடக்கிறது. இதை தடுக்க உக்ரைன் அரசு, யூரோ விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அவர்கள் கூறினர்.

திடீரென மேலாடையை கழற்றிவிட்டு, அரங்கத்தில் நுழைந்த அவர்கள் விளையாட்டு பிட்ச்களில் படுத்து கோஷம் போட்டனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலாடை இல்லாமல் போராட்டம் நடத்துவது ஃபிமன் அமைப்புக்கு புதிது அல்ல. அழகி போட்டி நடத்துவதும் ஒரு வகையில் பாலியல் தொழில்தான் என்று கூறி ஒரு முறையும், அமெரிக்க மாடல் அழகி பாரீஸ் ஹில்டனுக்கு எதிராக ஒரு முறையும் இதேபோல் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment