Monday, October 10, 2011

சீனாவில் ஆளில்லா விமானம் : டிரோன் தயாரிப்பு அதிகரிப்பு!.

Monday, October 10, 2011
வாஷிங்டன்: ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் தீவிரவாத ஒழிப்பில் அமெரிக்க கூட்டுப் படைகள் ஈடுபட்டு வருகின்றன. இதில் ராணுவ வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர். இதை தடுக்க ஆளில்லா போர் விமானங்கள் டிரோன் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. சிறிய அளவிலான டிரோன் எந்த சீதோஷ்ண நிலையிலும், கடினமான இடங்களுக்கும் சென்று தாக்குதல் நடத்திவிட்டு திரும்பும்.

இந்நிலையில், சீனாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஜூஹாய் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பரில் மிகப்பெரிய விமான கண்காட்சி நடந்தது. அப்போது பல சீன கம்பெனிகள், ரிமோட் மூலம் இயங்கும் 25க்கும் அதிகமான சிறியரக டிரோன் விமானங்களை இயக்கி காட்டின. மேலும் அமெரிக்க விமானங்கள், படைகள் மீது டிரோன்கள் தாக்குதல் நடத்துவது போன்ற அனிமேஷன் காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டன. இதனால் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளது.

சீன கம்பெனிகள் டிரோன்களை தயாரித்து விற்றால், ராணுவத்தை விட மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும். தீவிரவாதிகளின் கைகளில் இது கிடைத்து விட்டால் சர்வதேச அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் என்று ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஏமனில் அல் கய்தா முக்கிய தலைவர் அவ்லாகி மீது அமெரிக்க டிரோன் மூலம்தான் தாக்குதல் நடத்தப்பட்டது. இதேபோல் தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில் மற்ற நாடுகள் மீது ஒவ்வொரு நாடும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த தொடங்கினால் என்னவாகும்? என்று ராணுவ நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment