Friday, October 21, 2011

இராணுவத்தைப் பாதுகாத்து அவர்களின் குழந்தைகளுக்கு வளமான எதிர்காலத்தை பெற்றுக் கொடுப்பதற்காக அரசாங்கம் பரந்தளவில் செயற்படும்-கோத்தபாய ராஜபக்ஷ!

Friday, October 21, 2011
இராணுவத்தைப் பாதுகாத்து அவர்களின் குழந்தைகளுக்கு வளமான எதிர்காலத்தை பெற்றுக் கொடுப்பதற்காக அரசாங்கம் பரந்தளவில் செயற்படும். நாட்டிற்கு தேவை சிறந்த தலைமைத்துவத்தினாலான பிரஜைகளேயாவர் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

முப்படைகளினதும் பொலிஸாரினதும் நலனை மையப்படுத்தி கிழமை ஒரு தடவையேனும் ஏதாவது ஒரு நிகழ்வு நடைபெற்ற வண்ணமே உள்ளது. இவற்றை மென்மேலும் மேம்படுத்தி அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு 02 இல் அமைந்துள்ள இராணுவ சேவை கல்வியகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விஷேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த முப்படையின் வீரர்களையும் அரசோ பொது மக்களோ ஒரு போதும் மறக்க மாட்டார்கள். உயிர்த் தியாகம் செய்த வீரர்களை கௌரவிப்பதற்காக அவர்களின் பிள்ளைகளுக்கு தேவையான அனைத்து வசதி வாய்ப்புகளையும் அரசாங்கம் வழங்கும்.

இராணுவ வீரர்களின் குழந்தைகளை நாட்டிற்கு முன்னுதாரணமான தலைமைத்துவத்தின் சந்ததியினராக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இதனை மையப்படுத்தியே கொழும்பில் இராணுவத்தினரின் குழந்தைகளுக்காக விஷேட கல்லூரி அமைக்கப்பட்டது. இக்கல்லூரியில் ஏனைய பாடசாலைகளை விட சிறந்த சூழலும் நவீன வசதிகளும் காணப்படுகின்றன என்றார்

No comments:

Post a Comment