Sunday, October 23, 2011

தமிழக மீனவர்கள் உயிரை துச்சமாக நினைக்கிறது மத்திய அரசு- பிரதமர் முன்னிலையில் ஜெயலலிதா குற்றச்சாட்டு!

Sunday, October 23, 2011
இந்தியாவின் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது இந்தியாவின் சகல் முதல்வர்களும் இதில் பங்கேற்பதாக இருந்தது. குஜராத் முதல்வர் நரேந்திரமோடி உள்ளிட்டவர்கள் ஆஜராகியிருந்த நிலையில் தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசு சார்பில் கலந்து கொண்டு முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கையை வாசித்தார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் அல்லாத மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அரசு அணுகுவதாக பிரதமர் முன்னிலையிலேயே குற்றம் சுமத்தினார் பன்னீர் செல்வம். அவர் வாசித்த அறிக்கையில்,காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யாத மாநில மக்களும் இந்திய குடிமகன்கள்தான் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை. அந்த மாநிலங்களின் நியாயமான தேவைகளை கூட மத்திய அரசு செய்வ தில்லை. நாங்கள் பல தடவை கோரிக்கை விடுத்தும் தமிழ் நாட்டுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை. ஆனால் கூட்டணியில் உள்ள ஒரே காரணத்துக்காக மேற்குவங்க மாநிலத்துக்கு சிறப்பு திட்டம் அறிவித்தனர்.இது காங்கிரஸ் இல்லாத அரசுகள் மீது மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதையே காட்டுகிறது. மத்திய அரசு சமீப காலங்களில் அறிவித்த திட்டங்கள் இயற்கையாகவே ஜனநாயகத்துக்கு எதிரானவை ஆகும்.வன்முறையை தடுக்க மத்திய அரசு 2011-ம் ஆண்டு சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது. எல்லா அதிகாரங்களையும் மத்திய அரசிடம் குவியச் செய்வதாக உள்ளது. இதனால் மாநில அரசுகள் அதிகாரம் இல்லாததாக ஆக்கப்பட்டுள்ளன. மேலும் 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி மாநில ஆட்சியை கலைக்க முடியும் என்ற அச்சுறுத்தலை நீடிக்க செய்யும் முயற்சியாக இது உள்ளது.

மீனவர் விவகாரம்.

பாக் ஜலசந்தியில் அடிக்கடி தமிழ்நாட்டு மீனவர்கள் சிங்களர்களால் தாக்கப்படுகிறார்கள். இதை இந்தியர்கள் மீதான தாக்குதலாக இதுவரை மத்திய அரசு பார்க்கவில்லை.இந்த விவகாரத்தை தமிழ்நாட்டுக்கு மட்டுமே ஏற்பட்டுள்ள ஒரு சிறு பிரச்சினை என்ற கோணத்துடன் மத்திய அரசு கையாள்வது வேதனை தருகிறது. தமிழ்நாட்டு மீனவர்களின் உயிரைப் பற்றி பேசுவதை அர்த்தமற்றதாக மத்திய அரசு கருதுவது போல் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தை நடத்துவதால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை என்றே அஞ்சுகிறேன்.தமிழக கடலோர பகுதி மீனவர்களுக்கு மீன்பிடி தொழில் வாழ்வாதார போராட்டமாக உள்ளது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்களர்களால் தாக்கப்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் மத்திய அரசு கண்டும் கானாமல் இருப்பது எங்களுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எதிர் காலத்திலாவது மத்திய அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment