Friday, October 21, 2011

பெங்களூர் கோர்ட்டில் ஜெ.விடம் இன்றும் சரமாரி கேள்வி!

Friday, October 21, 2011
பெங்களூர்: சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்காக பெங்களூர் தனி கோர்ட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று 2-வது நாளாக ஆஜராகி, நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். கடந்த 1991 முதல் 96 வரை முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடிக்கு சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, தற்போது பெங்களூர் தனி கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 14 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கில், 109 முறை ஜெயலலிதா தரப்பில் வாய்தா வாங்கப்பட்டது.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூர் தனி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி மல்லிகார்ஜுனய்யா உத்தரவிட்டார். நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுக்கள் கர்நாடக ஐகோர்ட்டிலும் சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடியானது. இதையடுத்து அக்டோபர் 20-ம் தேதி கோர்ட்டில் ஆஜராவதாக ஜெயலலிதா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி, ஜெயலலிதா ஆஜராகவிருந்த தனி கோர்ட், பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது.

இந்நிலையில், கர்நாடகாவில் போதிய பாதுகாப்பு செய்யப்படாததால் கோர்ட்டில் ஆஜராவதை 2வாரம் தள்ளிவைக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ‘ஜெயலலிதாவுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் கர்நாடக அரசு செய்வதாக உறுதி அளித்துள்ளது. எனவே கண்டிப்பாக 20-ம் தேதி ஆஜராக வேண்டும்’ என உத்தரவிட்டனர்.
இதையடுத்து, கோர்ட்டில் ஆஜராவதற்காக ஜெயலலிதா நேற்று காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் பெங்களூர் வந்தார்.

அவருடன் சசிகலா, இளவரசி ஆகியோரும் வந்தனர். சுதாகரன் தனியாக கோர்ட்டுக்கு வந்திருந்தார். ஜெயலலிதா வருகையையொட்டி பெங்களூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பத்திரிகையாளர்கள் உள்பட யாரும் கோர்ட் வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. தமிழக வாகனங்கள், கர்நாடக எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டன. காலை 10.30 மணிக்கு கோர்ட் வளாகத்துக்குள் ஜெயலலிதா சென்றார். 11.20 மணி அளவில் நீதிபதி மல்லிகார்ஜுனய்யா, ஜெயலலிதாவிடம் கேள்விகளை கேட்க தொடங்கினார். ஒவ்வொரு கேள்விக்கும் ஜெயலலிதா ஆம், இல்லை என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தார்.

சில கேள்விகளுக்கு மட்டும் சிறிய விளக்கத்துடன் பதில் கூறினார். காலையில் தொடங்கிய விசாரணை, மதிய உணவு இடைவேளைக்கு பிறகு 4.30 மணிக்கு முடிந்தது. ஜெயலலிதாவிடம் கேட்பதற்காக 1,384 கேள்விகள் தயாரிக்கப்பட்டிருந்தது. முதல்நாள் விசாரணையில் நீதிபதி கேட்ட 379 கேள்விகளுக்கு மட்டுமே ஜெயலலிதா பதில் அளித்தார். அதனால், நாளையும் (இன்று) விசாரணை தொடரும் என்று நீதிபதி அறிவித்தார். இதையடுத்து, 5.15 மணிக்கு கோர்ட்டில் இருந்து ஜெயலலிதா சென்னை புறப்பட்டு சென்றார்.

இரண்டாவது நாளாக கோர்ட்டில் ஆஜராவதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 9.20 மணிக்கு புறப்பட்டு பெங்களூர் வந்தார் ஜெயலலிதா. அவருடன் சசிகலா, இளவரசி உள்ளிட்ட 9 பேர் வந்தனர். கோர்ட்டில் ஆஜராகி, நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் இன்னும் 1005 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டி உள்ளது. இன்று ஒரே நாளில் அத்தனை கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியாவிட்டால், 3-வது நாளாக நாளை அல்லது திங்கட்கிழமை விசாரணை நடக்கும் என கூறப்படுகிறது.

விசாரணையின்போது, அரசு வக்கீல்கள் ஆச்சார்யா, சந்தேஷ் சவுத்தா ஆகியோரும் ஜெயலலிதா தரப்பில் மூத்த வக்கீல் பி.குமார், கந்தசாமியும் சசிகலா, இளவரசி சார்பில் வக்கீல்கள் ராஜன், வெங்கடேஷ்வரலு, மூர்த்தி ராவ் மற்றும் சுதாகரன் சார்பில் சரவணகுமார் ஆஜராகினர். அதிமுக வக்கீல்கள் பால்கனகராஜ், அன்பு, ரமேஷ், விவேகவாணன், சுந்தர் ஆகியோரும் கோர்ட்டில் ஆஜராகினர். ஜெயலலிதா வருகையொட்டி, பெங்களூரில் இன்றும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோர்ட் வளாகத்திலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

No comments:

Post a Comment