Saturday, October 22, 2011

நடுவானில் பறந்த போது விமானத்தில் குழந்தை பெற்ற பெண்!

Saturday, October 22, 2011
புதுடெல்லி:டெல்லியில் இருந்து இன்று அதிகாலை கனடாவின் டோரண்டோ நகருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அதில் அமிர்தசரசைச்சேர்ந்த குல்ஜீத் கவுர் என்ற நிறைமாத கர்ப்பிணியும் பயணம் செய்தார். அதிகாலை 1.45 மணிக்கு விமானம் டெல்லியில் இருந்து புறப்பட்டது. அதிகாலை 3.30 மணிக்கு கஜகஸ்தான் நாட்டின் மீது 34 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டு இருந்தது.

அப்போது குல்ஜீத் கவுருக்கு பிரசவ வலி ஏற்பட்டு துடித்தார். உடனே விமானப்பணிப் பெண்கள் வந்து பார்த்தனர். பிரசவ வலியால் அவர் துடிப்பது பற்றி விமானிக்கு தகவல் தெரிவித்து உஷார்படுத்தினர். விமானத்தில் யாராவது டாக்டர் பயணம் செய்கிறாரா? என்று விசாரித்தனர். அப்போது ஒரு பெண் டாக்டர் பயணம் செய்வது தெரிய வந்தது. அவர் கர்ப்பிணிக்கு உதவி செய்தார். சில நிமிடத்தில் குல்ஜீத் கவுருக்கு விமானத்திலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது.

இந்த தகவல் விமானிக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் அவசர உதவி தேவைப்படுகிறதா? என்று கேட்டார். ஆனால் பணிப்பெண்கள் நார்மல் டெலிவரிதான். தாயும் குழந்தையும் நலமாக இருக்கிறார்கள் எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து விமானம் இடையில் எங்கும் நிறுத்தப்படாமல் டோரண்டோ சென்றடைந்தது. அதன் பிறகு தாயும் குழந்தையும் அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

விமானத்திலேயே பெண்ணுக்கு குழந்தை பிறந்ததை அறிந்து மற்ற பயணிகள் மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். 300 பயணிகள் ஏறினோம். 301 பயணிகளாக இறங்குகிறோம் என்று ஒரு பயணி ஜோக் அடித்தார்.

No comments:

Post a Comment