Tuesday, October 11, 2011

மீனவர் தாக்குதல் பிரச்னை குறித்துஇலங்கை அதிபர் - மத்தாய் ஆலோசனை!

Tuesday, October 11, 2011
தமிழக மீனவர்கள் மீதான, இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல் பிரச்னை குறித்து, மத்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாய், நேற்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷேயிடம் விவாதித்தார்.இலங்கையில், மூன்று நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்ட மத்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாய், நேற்று முன்தினம், யாழ்ப்பாணம் பகுதிக்குச் சென்று, அங்கு இந்திய அரசு சார்பில், தமிழர்களுக்காகக் கட்டப்பட்டு வரும் வீடுகளைப் பார்வையிட்டார். தமிழக மீனவர்கள், இலங்கை கடற்பகுதிக்குள் புகுந்து மீன் பிடிப்பதால், தாங்கள் அடையும் பாதிப்பு குறித்து, யாழ்ப்பாண மீனவர்கள் மத்தாயிடம் தெரிவித்தனர்.

அதற்குப் பதிலளித்த மத்தாய், "வாழ்வாதாரப் பிரச்னைகளில் இது ஒன்றாக இருக்கலாமே தவிர, இதில் வன்முறை நிகழ்வதற்கு வாய்ப்பில்லை. இருதரப்பு மீனவர்களின் பிரதிநிதிகளும் ஒன்றாகக் கூடி, கலந்தாலோசித்து, இப்பிரச்னைக்கு முடிவு கட்ட வேண்டும்' என்றார். தொடர்ந்து, அதிபர் ராஜபக்ஷேவைச் சந்தித்த மத்தாய், இப்பிரச்னை குறித்து கலந்தாலோசித்தார். மேலும், தமிழ் ஐக்கிய முன்னணி கட்சித் தலைவர் வி.ஆனந்தசங்கரி உள்ளிட்ட தமிழ் தலைவர்களையும் அவர் சந்தித்தார்.
அப்போது, "தமிழ்ப் பகுதிகளில் சிங்களவர் குடியேற்றம், ராணுவக் கட்டமைப்புகளைக் கட்டுவித்தல் உள்ளிட்ட, இலங்கை அரசின் நடவடிக்கைகளால், தமிழர் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழ்ப் பகுதிகளில் உள்ள ராணுவத்தைத் திரும்பப் பெறும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. மாறாக எந்த நிகழ்ச்சி நடந்தாலும், அதில் ராணுவத்தினர் சிலர் பங்கேற்கின்றனர்' எனக் குற்றம் சாட்டினர்.

No comments:

Post a Comment