Monday, October 03, 2011அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து எமது மக்களின் நலனுக்காகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்தார்.
வெள்ளவத்தை கொலிங்வூட் பாதையிலுள்ள தொடர்மாடி உரிமையாளர்கள் மத்தியில் உரையாற்றும் பொழுது மேலும் தெரிவித்ததாவது :-
நான் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவதனால் ஒரு சிலர் என்னை விமர்சனம் செய்கிறார்கள். நான் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரோ அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரோ அல்ல. அரசாங்கத்தின் மூலமாக எமது மக்களுக்கு கிடைக்க வேண்டிய அபி விருத்திகளை அடிப்படையாகக் கொண்டே செயல்பட்டு வருகின்றேன்.
கொழும்பு மாவட்டத்திலுள்ள தமிழ் பாடசாலைகளை முழுமையான முறையில் அபிவிருத்தி செய்வதே எனது இலக்காகும். அதேபோல் தமிழ் மக்களுக்கு ஏதாவது அநீதி இழைக்கப்படுமானால். அவர்களுக்காக குரல் கொடுக்க ஒரு போதும் தயங்கி யதில்லை. கொழும்பு மாவட்டத்தில் பல பகுதிகளில் பாரிய அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகின்றேன். கொழும்பு மாநகர சபை தேர்தல் மூலமாக மேலதிக பணிகளை ஆற்றுவதற்கே வெற்றிலை சின்னத்தில் மூன்று தமிழ் வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளேன்.
வெள்ளவத்தை பகுதியிலுள்ள சில தொடர்மாடி வீடுகளில் முறையான கழிவுநீர் கால்வாய்கள் இல்லை. பல வீடுகளுக்கு முறையான உறுதி பத்திரம் இல்லை. தொடர்மாடி வீடுகள் அமைந்துள்ள பகுதி பாதைகள் செப்பனிடப்பட வேண்டும். இவை அனைத்தும் மாநகர சபையினூடாகவே செய்து கொடுக்கப்பட வேண்டும். மாநகர சபையை அரசாங்கமே கைப்பற்ற இருப்பதனால், இந்த அரசாங்கத்தின் மூலமாகவே மக்களுக்கான சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
நாம் செய்திருப்பதை கூறியும் செய்யப் போவதை சொல்லியுமே மக்கள் ஆணையை கேட்டு நிற்கின்றேன். ஆனால் மாற்று கட்சிக்காரர்கள் மாநகர சபையினூடாக செய்ய முடியாததை செய்வதாக கூறி வாக்கு கேட்கின்றார்கள். கொழும்பு மாநகர தமிழ் மக்கள் எனது வேட்பாளர்களுக்கு தமது மூன்று விருப்பு வாக்குகளையும் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment