Friday, October 14, 2011

இலங்கையின் பிரதித் தூதுவராக இருக்கும் ராஜதந்திரிக்கு எதிராக வழக்குகளை தொடர்வதற்கு ஒருசாரார் புலிகளின் பணத்தை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்!

Friday, October 14, 2011
அமெரிக்காவில் இன்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதித் தூதுவராக இருக்கும் ராஜதந்திரிக்கு எதிராக சர்வதேச சட்டத்தின் கீழ் வழக்குகளை தொடர்வதற்கு ஒருசாரார் புலிகளின் பணத்தை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கை தாக்கல் செய்தவர் ரமேஷ் என்ற எல்.ரி.ரி.ஈ. தலைவரின் மனைவியாகும். இந்தப் பெண்மணி எல்.ரி.ரி.ஈ. சீருடை அணிந்து போராளியாக யுத்தத்தில் ஈடுபட்ட போது எடுத்த படங்கள் எங்கள் கைவசம் இருக்கின்றன.

இந்தப் பெண் தான் எங்கள் தூதுவருக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டையும் யுத்தக் குற்றச் செயல்களை புரிந்ததாகவும் குற்றம் சாட்டி அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்துள்ளார் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கை இராணுவமும் அரசாங்கமும் யுத்தம் முடிவடைந்த கடைசி நாட்களில் இடம்பெயர்ந்து அகதிகளான மூன்றரை இலட்சம் மக்களுக்கு எவ்வித துரோகமும் இழைக்கவில்லை. அவர்களுக்கு புனர்வாழ்வளித்து இப்போது அந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்திக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்த ஜனாதிபதி, யுத்தம் முடிவடைந்த இறுதி நாட்களில் அரசாங்கம் மேற்கொண்ட மனிதாபிமான பணிகள் அனைத்திற்கும் நானே பொறுப்பாளி, நாம் எந்தக் குற்றத்தையும் இழைக்கவில்லை.

விரும்பினால் எனக்கு எதிராகவும் வழக்கு தொடரட்டும் என்று சொன்னார். எதையும் எதிர்நோக்கும் பலமும் நேர்மையும் எனக்கு இருக்கிறது. விரும்பினால் அவர்கள் எனக்கெதிராகவும் வழக்கு தொடரட்டும். ஜனாதிபதியாக நான் இருக்கும் வரை அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்களை அரசியலில் அறிமுகப்படுத்தும் மாபெரும் குற்றத்தை எங்கள் நாட்டின் அரசியல் கட்சிகள் செய்கின்றன என்று தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், கசிப்புக்காரர்கள் மற்றும் வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் பிள்ளைகள் அரசியல் கட்சிகளால் தேர்தல்களில் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள் என்று கூறினார்.

ஒரு கட்சி செப்பே ஐயாவின் மகனை வேட்பாளராக போடும் போது மற்றக்கட்சி பால ஐயாவின் மகனை வேட்பாளராக நியமிக்கிறது. அப்போது அரசியலில் வன்முறைகள் ஏற்படுவதை எவராலும் தடுக்க முடியுமா? என்ற கேள்வியை எழுப்பிய ஜனாதிபதி, இத்தகைய முயற்சிகளுக்கு குறிப்பிட்ட சிலரும் ஊடகங்களும் கூட துணை செல்கின்றன என்று சுட்டிக் காட்டினார்.

1988-89 ஜே.வி.பி. கலவரங்களின் போது அரசியல்வாதிகளுக்கு அரசாங்கத்தினால் அந்தளவிற்கு பாதுகாப்பு அளிக்க முடியாத காரணத்தினால் அரசியல்வாதிகள் தங்கள் தனிப்பட்ட நண்பர்களை பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக வைத்திருந்தார்கள் என்றும், அதன் மூலம் அரசியல் வன்முறை கலாசாரம் தோன்றியிருக்கலாம் என்றும் ஜனாதிபதி கூறினார்.

No comments:

Post a Comment