Sunday, October 16, 2011

சாய்பாபா வரலாறு 7 மொழிகளில் சினிமாவாகிறது!.

Sunday, October 16, 2011
ஏழு மொழிகளில் தயாராகும் சாய்பாபா வரலாற்று சினிமாவை கவர்னர் ரோசய்யா துவக்கி வைத்தார். புட்டபர்த்தி சாய் பாபாவின் வரலாறு, ‘பாபா சத்ய சாய்’ என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உட்பட ஏழு மொழிகளில் திரைப்படமாக தயாராகிறது. இதை பிரபல தெலுங்குபட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா இயக்குகிறார். சவுபாக்ய சித்ரா நிறுவனத்தின் சார்பில் கராடம் ராம்பாபு தயாரிக்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். இதன் துவக்க விழா பிரசாத் ஸ்டூடியோவில் நேற்று நடந்தது. தமிழக கவர்னர் ரோசய்யா பாடல் பதிவை துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘பகவான் சாய்பாபா வரலாற்றை சினிமாவாக இயக்க தகுதியானவர் கோடி ராமகிருஷ்ணாதான். அவருடன் இளையராஜாவும் இணைந்திருப்பது படத்துக்கு இன்னும் பெருமை சேர்க்கும். இது ஒரு நல்ல முயற்சி. சாய்பாபா பெருமைகள் பெரிய அளவில் பரப்பப்பட வேண்டும். அதற்கு இந்தப் படம் உதவும். திறமையான கலைஞர்கள் இணைந்து உருவாக்கும் இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்’’ என்றார்.

இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா கூறும்போது, ‘‘இதுவரை 130 படங்கள் வரை இயக்கி இருக்கிறேன். ஆனால் இதுதான் முக்கியமான படமாக இருக்கும். சாய்பாபாவுக்கு 158 நாடுகளில் பலகோடி பக்தர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் 6 கோடி பேர் இருக்கிறார்கள். இந்தப் படம் 7 மொழிகளில் தயாராகிறது. எனவே சாய்பாபா பக்தர்களிடம் மட்டுமல்லாது உலகத்தின் அனைத்து தரப்பு மக்களிடமும் இந்தப் படம் போய் சேரும். சாய்பாபா வேடத்தில் முன்னணி நடிகர் ஒருவர் நடிப்பார். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது’’ என்றார். விழாவில் இளையராஜா, அஞ்சலிதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment