Friday, October 21, 2011

இராணுவத் தலைமையக கட்டிடங்களுக்கான மாதாந்த வாடகை 76 இலட்சத்து 38 ஆயிரம் ரூபா வாடகையாக செலுத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது!

Friday, October 21, 2011
இராணுவத் தலைமையகப் பணி நடவடிக்கைகளுக்கென அமர்த்தப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு மாதாந்தம் 76 இலட்சத்து 38 ஆயிரம் ரூபா வாடகையாக செலுத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு நேற்று சபையில் அறிவித்தது.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அமர்வின் போது ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. தயாசிறி ஜயசேகரவினால் எழுப்பப்பட்டிருந்த கேள்விகளுக்கு பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் அனுப்பி வைக்கப்பட்டு சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பதிலிலேயே மேற் கண்டவாறு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக கேள்வியெழுப்பியிருந்த தயாசிறி ஜயசேகர எம்.பி.

காலி முகத்திடலில் அமையப் பெற்றுள்ள இராணுவத் தலைமையகம் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளதா என்றும் தற்போது தலைமையகம் வேறு இடங்களில் இயங்கி வருமேயானால் அதன் விபரங்களையும் மாத வாடகை தொடர்பிலான தகவல்களையும் அறிவிக்குமாறு பிரதம அமைச்சரிடம் கேட்டிருந்தார்.

இந்தக் கேள்விக்கு ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன பதிலளித்தார். அத்துடன் அது சபையிலும் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது.

இராணுவத் தலைமையகமானது குறித்த திகதியிலிருந்து அகற்றப்படவில்லை. எனினும் இராணுவத் தலைமையகப் பணிகளுக்கென வாடகைக் கட்டிடங்கள் பெறப்பட்டுள்ளன. இதன்படி இல. 37, ஹோட்டன் பிளேஸ் கொழும்பு 7 இல் அமையப் பெற்றுள்ள வாடகைக் கட்டிடத்துக்கென 57 இலட்சம் ரூபா மாதாந்த வாடகையாக செலுத்தப்படுகின்ற அதேவேளை, இலக்கம் 7 பி, எட்டாவது ஒழுங்கை, கொழும்பு 03 இல் அமையப் பெற்றுள்ள வாடகைக் கட்டிடத்துக்கென 19 இலட்சத்து 38 ஆயிரம் ரூபா வாடகையாக செலுத்தப்படுகின்றது.

இந்த வாடகைத் தொகைகள் அனைத்து வரிகளும் உள்ளடங்கலாகும்.

No comments:

Post a Comment