Saturday, October 15, 2011

பொதுமக்கள் போராட்டம் தீவிரமானது கூடங்குளம் அணுமின் நிலைய பணிகள் முடங்கின; 7-வது நாளாக உண்ணாவிரதம் நீடிப்பு!

Saturday, October 15, 2011
கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட கோரி பொதுமக்கள் 2-ம் கட்டமாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.106 பேர் தொடர் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் திருப்தி இல்லாததால் போராட்டம் தொடர்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை மத்திய அரசு நிறைவேற்றவேண்டும் என்றும் போராட்ட குழுவினர் வற்புறுத்தி உள்ளனர்.

இதனிடையே இன்று 7-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.முதல் 4 நாட்கள் இடிந்தகரையில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் பின்னர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து 300 அடி தூரத்தில் உள்ள எஸ்.எஸ்.புரம் விலக்கிற்கு வந்து முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். 106 பேரின் உண்ணாவிரத பந்தலும் இப்பகுதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.கடந்த 3நாட்களாக அணு மின் நிலையத்துக்கு பணிக்கு செல்லும் ஒப்பந்த தொழிலாளர்கள், ஊழியல்கள் மற்றும் என்ஜினீயர்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

யாரும் செல்லாத வகையில் பொதுமக்கள் அரண் அமைத்துள்ளனர்.கூடங்குளம்,இடிந்தகரை,கூட்டப்புளி,பெருமணல் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த போராட்டத்தில் மும்முரமாக உள்ளனர். பொதுமக்கள் போராட்டம் காரணமாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி தலைமையில் ஏராளமான போலீசார் அணுமின் நிலைய பிரதான வாசலில் குவிக்கப்பட்டு உள்ளனர்.கூடங்குளத்தை சுற்றிலும் செக்போஸ்ட் போல கற்கள்,முட்களால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இன்றும் அணுமின் நிலையத்துக்கு யாரும் பணிக்கு செல்லவில்லை.

அணுமின் நிலைய விஞ்ஞானிகள்,பொறியாளர்கள் பலர் நாகர்கோவிலில் தங்கி உள்ளனர்.கூடங்குளம் சுற்றுவட்டாரத்தில் தங்கி இருந்த வெளி மாநில தொழிலாளர்கள் பொதுமக்கள் போராட்டம் காரணமாக அங்கிருந்து காலிசெய்துள்ளார்கள். மேலும் அணுமின் நிலைய பணியாளர்கள் யாருக்கும் தங்குவதற்கு வீடு எதுவும் கொடுப்பதில்லை என மக்கள் முடிவெடுத்திருப்பதால் புதிதாக யாரும் பணிக்கு வரவில்லை.பாதுகாப்பு கருதி ஊழியர்கள் யாரும் பணிக்கு வரவேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

இதன் காரணமாக கூடங்குளம் அணு மின் நிலைய பணிகள் ஓட்டுமொத்தமாக முடங்கியுள்ளது. பொதுமக்கள் போராட்டத்தில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்கின்றனர்.ஆண்களும் பெண்களுமாக ஒரு நேரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டேர்திரள்வதால போலீசாரால் எதுவும் செய்யமுடியவில்லை.ஒரு பிரிவினர் வீட்டுக்கு செல்லும்போது மற்றொரு பிரிவினர் முற்றுகையில் ஈடுபடுகிறார்கள்.பொதுமக்களின் போராட்டம் நாளுக்குநாள் தீவிரம் அடைந்து வருகிறது.

No comments:

Post a Comment