Wednesday, October 12, 2011

4 செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி-18 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!.

Wednesday, October 12, 2011
ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) இருந்து, 4 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி-18 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்தியா - பிரான்ஸ் நாடுகள் இணைந்து பூமியின் தட்பவெப்ப நிலை மாற்றங்கள் குறித்து அறிய ‘மேகா-ட்ராபிக்யூஸ்Õ என்ற அதிநவீன செயற்கைகோளை தயாரித்தன.

இந்த செயற்கைக்கோள் மற்றும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த 'எஸ்ஆர்எம் சாட்', கான்பூர் ஐஐடி மாணவர்கள் தயாரித்த ‘ஜுகுனுÕ, லக்சம்பர்க்கில் தயாரித்த ‘வெசல்சாட்' ஆகிய 3 சிறிய செயற்கைகோள்களை பிஎஸ்எல்வி சி-18 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக இறுதிகட்ட சோதனைகள் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் தீவிரமாக நடந்தன. 48 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று முன்தினம் தொடங்கியது.

இன்று காலை 11.01 மணிக்கு பிஎஸ்எல்வி சி-18 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. தீப்பிழம்பை கக்கியபடி ராக்கெட் விண்ணில் பாய்ந்ததும் இஸ்ரோ மையத்தில் கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். புறப்பட்ட 26 நிமிடங்களில் 4 செயற்கைகோள்களும் ஒன்றன்பின் ஒன்றாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.

இதையடுத்து விஞ்ஞானிகள் ஒருவரையொருவர் கட்டித் தழுவி மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர். இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘இது சிறப்பான வெற்றி. 4 செயற்கைகோள்களும் பயனுள்ளவை. அவை செயல்பாட்டை தொடங்கிவிட்டன’’ என்றார். பிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment