Saturday, October 29, 2011

2ஆம் இணைப்பு--ராஜிவ் கொலையில் 3 பேர் தூக்கு ரத்து செய்ய மத்திய அரசு கடும் எதிர்ப்பு!

Saturday, October 29, 2011
சென்னை : ராஜிவ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 3 பேருக்கும் விதித்த தூக்கு தண்டனையை ரத்து செய்ய மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு சென்னை பூந்தமல்லி தடா சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதை எதிர்த்து 3 பேரும் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இதை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். இந்த கருணை மனுக்களை கடந்த ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நிராகரித்தார். இதைத் தொடர்ந்து 3 பேருக்கும் செப்டம்பர் 9&ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் வேலூர் சிறையில் நடந்தன. இதற்கிடையே, தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி, 3 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கருணை மனுவை பரிசீலிக்க ஜனாதிபதி 11 ஆண்டுகள் எடுத்துக் கொண்டதை சுட்டிக் காட்டி, அந்த அடிப்படையில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தனர். இந்த மனுக்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வந்தது. 3 பேர் சார்பில் பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி, ஆஜராகி வாதிட்டார். அவரது வாதத்தை கேட்ட நீதிபதிகள், மனுதாரர்களான சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற 8 வாரம் இடைக்கால தடை விதித்தனர். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு, 8 வார இடைவெளிக்கு பிறகு அதே நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் ஆஜராகி, உள்துறை செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: ராஜீவ் கொலை வழக்கில் 3 பேரின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு, தூக்கு தண்டனை நிறைவேற்ற தேதி நிர்ணயிக்கப்பட்டது.

புலிகளினால் ராஜிவ் காந்தி மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்தியாவில் தடை செய்யப்பட்ட இலங்கை புலிகளின் போராளிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் திட்டமிட்டு சதி செய்து ராஜீவ்காந்தியை படுகொலை செய்துள்ளனர். இதில் ராஜிவ்காந்தி உள்பட 16 பேர் பலியாகியுள்ளனர். போலீஸ் அதிகாரிகள் 9 பேர் பலியாகியுள்ளனர். பொதுமக்கள் 6 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலையை நீதிமன்றம் நினைத்து பார்க்க வேண்டும். இந்த சம்பவத்துக்கு பிறகு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. 3 பேரின் கருணை மனுவை ஜனாதிபதி ஏற்கனவே நிராகரித்துவிட்டார்.

இது சரியானது தான். ராஜீவ்காந்தி கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. ராஜீவ்காந்தி கொலையாளிகள் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கூடாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பில், வெளிநாட்டுடன் சதி செய்து இந்திய மண்ணில் ராஜீவ்காந்தியை கொலை செய்த குற்றம் கொடூரமானது. இது மிகவும் மன்னிக்க முடியாத குற்றம். எனவே 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியாது என்றும் தெளிவாக கூறியுள்ளது.

இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிரான குற்றம் செய்த 3 பேரின் தண்டனையை ரத்து செய்யக்கூடாது. இந்த வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற நளினிக்கு மட்டும் தமிழக கவர்னர் கருணை காட்டி அவரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார். மற்ற 3 பேரின் கருணை மனுவை தமிழக கவர்னரும், ஜனா
திபதியும் நிராகரித்துள்ளனர்.

கருணை மனுவை பரிசீலிப்பதற்கு காலக்கெடு எதையும் உச்ச நீதிமன்றம் நிர்ணயிக்கவில்லை. கருணை மனுவை பரிசீலித்து முடிவு எடுக்க ஜனாதிபதிக்கு அரசியல் சட்டத்தில் முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. வழக்கின் கோப்புகளையும் தன்மையையும் ஆராய ஜனாதிபதி தேவையான காலக்கெடு எடுத்திருக்க கூடும். நளினிக்கும் மட்டும் ஒரு முடிவு எடுத்து விட்டு மற்றவர்களுக்கு வேறு முடிவு எடுத்தது பாராபட்சமானது என்று கூறியதை ஏற்க கூடாது.

நளினி மனுவில் கவர்னர் எடுத்த முடிவை எதிர்த்து மனுதாரர்கள் வழக்கு எதுவும் தாக்கல் செய்யவில்லை. 3 பேருக்கு ஆதரவு தெரிவித்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், முன்னாள் நீதிபதிகள், பிரபல சட்டநிபுணர்கள் ஆகியோர் மத்திய அரசுக்கு மனு கொடுத்துள்ளனர். எனவே தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கூறியதை ஏற்க கூடாது.

இவர்களின் தண்டனையை குறைத்தால் இது முன் உதாரணமாகிவிடும். இந்த வழக்கு அரசியல் நோக்கத்துடன் போடப்பட்டது. இது விசாரணைக்கு உகந்தது இல்லை. உச்ச நீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்பை எதிர்த்து இங்கு வழக்கு தாக்கல் செய்ததை ஏற்க கூடாது. இதை தள்ளுபடி செய்ய வேண்டும். ஜனாதிபதி உத்தரவில் நீதிமன்றம் சட்டப்படி தலையிட முடியாது.

எனவே, மனுதாரர்களுக்கு கருணை காட்ட வேண்டும் என்ற கோரிக்கையை கோர்ட் ஏற்கக் கூடாது. அவர்களுக்கு கருணை காட்டக் கூடாது. தண்டனையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு மத்திய அரசு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி, தமிழக உள்துறை செயலாளர், சிறைத்துறை ஐ.ஜி., வேலூர் சிறை சூப்பிரண்ட் சார்பாக பதில் மனுக்களை தாக்கல் செய்தார்.

அதில், ‘உயர்நீதிமன்றம் 8 வார காலம் தடை விதித்ததால் தண்டனையை நிறைவேற்றாமல் நிறுத்தி வைத்துள்ளோம். தமிழக கவர்னரும் இவர்களின் கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதியும் கருணை மனுவை நிராகரித்த பிறகு, இதுதொடர்பாக தமிழக அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது. மத்திய அரசுதான் இதில் முடிவு எடுக்க வேண்டும். இதில் தமிழக அரசு கூறுவதற்கு எதுவும் இல்லை, எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் இப்போது இல்லை. இந்த வழக்கில் மத்திய அட்டர்னி ஜெனரல் ஆஜராக இருப்பதால் அவகாசம் வேண்டும். எனவே, விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்’’ என்று மத்திய அரசு வக்கீல் கேட்டுக் கொண்டார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், நவம்பர் 29&ம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்து உத்தரவிட்டனர். அதுவரை தண்டனை நிறைவேற்ற தடை நீடிக்கிறது.

வேறு மாநிலம் மாற்ற தமிழக அரசு எதிர்ப்பு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 3 பேர் சார்பாக ஆஜராகி, இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது; 18 ம் தேதி விசாரணைக்கு வருகிறது என்றார். அப்போது தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் நவனீதகிருஷ்ணன், வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கூடாது ; இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யும் என்றார். இந்த வழக்கில் அரசு ப்ளீடர் வெங்கடேஷ் அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்தார்.

No comments:

Post a Comment