Friday, October 07, 2011வரிஏய்ப்பு, கறுப்புப் பணம் பதுக்கல் உள்ளிட்ட விவரங்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக இந்தியா, சுவிட்சர்லாந்து இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை உறுதி செய்வற்கான 100 நாள் காத்திருப்பு காலம் வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது.
இதையடுத்து, அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் சுவிட்சர்லாந்துக்கும், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்தியாவுக்கும் இந்த ஒப்பந்தம் அமலாகும் என இந்திய வெளியுறவு அமைச்சகச் செயலர் எம். கணபதி தெரிவித்தார். இரட்டை வரி விதிப்புத் தவிர்ப்புக்காக இரு நாடுகளுக்கும் இடையே 1994-ம் ஆண்டில் முதன் முதலாக ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதன் பிறகு 2000-ம் ஆண்டில் இந்த ஒப்பந்தத்தம் கூடுதல் விதிமுறைகள் சேர்க்கப்பட்டுத் திருத்தப்பட்டது.
இதை மீண்டும் திருத்துவதற்கான ஒப்பந்தம் தில்லியில் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி கையெழுத்தானது. இப்படியொரு திருத்தம் செய்துகொள்வதற்கு கடந்த ஜூன் மாதமே சுவிஸ் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது.
அந்நாட்டு விதிமுறைகளின்படி பொது மக்களின் ஆட்சேபங்களைத் தெரிவிப்பதற்காக 100 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டது. அந்த அவகாசம் வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது. இதையடுத்து ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இரு நாடுகளும் வரி தொடர்பான விவரங்களைப் பரிமாறிக்கொள்ள முடியும்.
குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் அண்மையில் சுவிட்சர்லாந்து வந்திருந்தபோது, "இந்த ஒப்பந்தம் விரைவில் உறுதி செய்யப்படும்' என் அந்நாட்டு அதிகாரிகள் அவரிடம் கூறியதாக கணபதி தெரிவித்தார்.
No comments:
Post a Comment