தமிழ்க் கைதிகளுக்கு பொது மன்னிப்பு::கிறீஸ் பூதங்களுக்கு கடுமையான தண்டனை::தமிழ் பேசும் மக்களின் மனங்களை வென்றெடுக்க அரசு உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன?::மர்ம மனிதன், அவசரகாலச் சட்டம் தொடர்பாக அரசியல்வாதிகள் கருத்து!
Sunday, September 04, 2011
தமிழ்பேசும் மக்கள் வாழும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் மர்ம மனிதன் மற்றும் கிaஸ் பூதங்களின் நடமாட்டத்தால் அம்மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக எழுந்துள்ள சர்சை மற்றும் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமையால் தமிழ் மக்களுக்கு ஏற்படக் கூடிய நன்மை தீமைகள் தொடர்பாக அரச மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் கேட்டறிந்து கொண்ட விடயங்களை வாசகர்களுக்காக தருகின்றோம்.
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளமையினால் அரசாங்கம் சிறைகளிலுள்ள தமிழ் இளைஞர்களை துரிதமாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதுடன் மர்ம மனிதர் பீதியை மக்கள் மனங்களிலிருந்து முற்றாக நீக்க வேண்டும் என்பதாகவே இவர்களது கருத்துக்கள் அமைந்துள்ளன.
அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த
அவசரகால சட்டம் நீக்கப்பட்டமையை அடுத்து, அவசரகால சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அல்லது சரணடைந்தவர்கள் உடனடியாகவே விடுதலை செய்யப்படமாட்டார்கள்.
பயங்கரவாத தடைச்சட்டம், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கும் அதிகாரத்தை கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சந்தேகநபர்கள், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமையால் அவர்களை சாதாரண சட்டத்தின் கீழ் உடனடியாகவே விடுவிக்க முடியாது.
அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், அந்த சட்டம் அகற்றப்பட்டுள்ளமையால், தற்போது சாதாரண சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு அவர்களது விடுதலையை அரசாங்கம் நிச்சயம் துரிதப்படுத்தும்.
அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார
அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்ப்பட்ட வர்கள் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டு, சாதாரண சட்டங்களின் ஊடாகவே இனி விசாரணைக்கு உட்படுத்தப்படுவர். புதிய சட்டங்கள் எதுவும் கொண்டு வரப்படமாட்டாது. அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ள போதிலும், அதற்குப் பதிலாக நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சில ஒழுங்கு விதிகளை அரசு அறிமுகம் செய்யவுள்ளது என்று செய்திகள் வெளியாகியிருந்தன. அப்படிப் புதிய சட்டங்கள் எவையும் கொண்டுவரப்படமாட்டாது.
தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சில ஒழுங்கு விதிகளைக் கொண்டுவந்து, சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைத் தொடர்ந்து தடுத்து வைக்க வேண்டிய தேவை ஒன்றும் அரசுக்குக் கிடையாது. அவ்வாறு புதிய ஒழுங்கு விதிகளும் கொண்டு வரப்பட மாட்டாது.
முத்து சிவலிங்கம்,
தலைவர் - இ.தொ.கா,
பொருளாதார பிரதியமைச்சர்
‘மலையகத்தில் மர்ம மனிதன் பீதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறான நிலைமை வந்தால் மக்கள் தம்மைத் தாமே பாதுகாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அமைதியைச் சீர்குலைப்போருக்கு மக்களே பாடம் புகட்டுவர்.
மலையக சமூகத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு அப்பால் ஆசிரியர், வர்த்தகர்கள் சமூகம் எனப் பெருந்திரளானோர் உள்ளனர். இப்போது மலையக நகரங்களில் உள்ள மக்கள் அனைவரும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் தலைமைத் துவத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
எனவே, மலையக சமூகத்தை இனி எவரும் ஏமாற்ற முனைய முடியாது. அவர்களுக்குத் தகுந்த பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்.
விஜயகலா மகேஸ்வரன், ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது போல் பயங்கரவாதத் தடைச் சட்டமும், உடடினயாக நீக்கப்படுவதுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.
நாட்டில் பல வருடங்களாக அமுலிலிருந்த அவசர காலச் சட்டம் நீக்கப்பட்டமை வரவேற்கத்தக்கதாகும். யுத்தத்தை காரணம் காட்டி அமுல்படுத்தப்பட்ட இந்தச் சட்டம் யுத்தம் முடிவடைந்து இரண்டரை வருடங்களுக்கு பின்னராவது நீக்கப்பட்டமை தமிழ் பேசும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விடயமாகும்.
அவசரகால சட்டத்தின் கீழ் தமிழ் மக்கள் இதுவரை காலமும் துன்பங்களையும் அனுபவித்தனர். தமிழ் மக்கள் வகைதொகை யின்றி கைது செய்யப்பட்டதுடன் தடுத்து வைக்கப்பட்டதற்கும் இந்தச் சட்டம் பிரதான காரணமாக அமைந்தது.
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதைப் போன்று பயங்கரவாதத் தடைச் சட்டமும் உடனடியாக நீக்கப்படுதல் அவசியமாகும். ஏனெனில் நாட்டில் யுத்தம் முடிவடைந்துள்ளமையினால் அந்த சட்டமும் தேவையற்றதாகும்.
இதற்கான செய்திட்டத்தை சட்டமா அதிபர் திணைக்களமும் நீதியமைச்சும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
எம். ஏ. சுமந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.
அவசரகாலச் சட்டத்திலுள்ள விதிமுறைகள் பயங்கரவாத தடைச்சட்டத்திலும் உள்ளன. எனவே, அவசரகாலச் சட்டத்தை நீக்கியதால் மட்டும் எவ்வித மாற்றமும் பயன்களும் ஏற்படப் போவதில்லை. பயங்கரவாதத் தடைச்சட்டமும் நீக்கப்பட வேண்டும்.
அவரசகாலச் சட்டத்தில் உள்ள விதி முறைகள் பயங்கரவாத தடைச்சட்டத்திலும் உள்ளன. எனவே அவசரகாலச் சட்டத்தை மாத்திரம் நீக்கியுள்ளதால், எவ்வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை. எனவே பயங்கரவாத தடைச்சட்டமும் நீக்கப்பட வேண்டும்.
அதேவேளை, அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
அ. வரதராஜப் பெருமாள்,
வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர்
வடக்கு கிழக்கு மாகாணங்கள் பு’ராவும் குறிப்பாக தற்போது யாழ்ப்பாணக் குடாநாட்டில் மர்ம மனிதர்கள் பற்றியயபயத்தில் மக்கள் ஒவ்வோர் இரவும் பயந்து நடுங்கி வாழ வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். இரவில் ஆண்கள் நித்திரை முழித்து தமது பெண்டிர் பிள்ளைகளைப் பாதுகாப்பதில் ஈடுபட வேண்டியுள்ளது. பெண்கள் எந்த நேரத்தில் மர்ம மனிதர்கள் தங்கள் வீடுகளுக்கும் வந்துவிடுவார்களோ என்று பயந்து பயந்தே இரவுகளைக் கழிக்க வேண்டியவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். மர்ம மனிதர்கள் பயத்தில் இரவில் நித்திரை முழிப்பதனால் அடுத்த நாள் அவர்கள் தமது வேலைகளை ஒழுங்காகச் செய்யமுடியாது உள்ளனர்.
குழந்தைகள், சிறுவர்கள் இரவு முழுவதும் தமது பெற்றோர்களைக் கட்டிப்பிடித்தபடி பயத்தில் உறைந்தபடி உள்ளனர். அவர்கள் இரவு நேரங்களில் தமது படிப்புகளை மேற்கொள்ள முடியாதுள்ளனர்.
இந்த நிலைமையானது வடக்கு கிழக்கின் மக்கள் சமூக முழுவதையும் உளவியல் ரீதியாக வாட்டி வதைக்கும் ஒரு கொடூரமாக இங்கு நிறைவேறிக் கொண்டிருக்கிறது.
இதனை பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் வதந்தி என்று கூறுவதில் அர்த்தம் இல்லை. பொத்துவில் தொடக்கம் பருத்தித்துறை வரை பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் மர்மமாக நடமாடிய மனிதர்களை மக்கள் துரத்திய சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன.
எம்.கே. சிவாஜிலிங்கம், ரெலோ சிரேஷ்ட முக்கியஸ்தர்
பயங்கரவாதத் தடைச் சட்டம் அகற்றப்பட வேண் டும் எனவும், புலிகளின் முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்காது, தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியளிக்காது.
ஐக்கிய இலங்கை என்ற கோட்பாட்டை தமிழ் சமூகம் ஏற்றுக் கொள்ளத் தயாரான ஓர் நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்துவது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.
சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் என 800 அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளின் விடுதலை தொடர்பான அரசாங்கப் புள்ளி விபரத் தரவுகளில் முரண்பாடு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
சிவனேசத்துரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண முதலமைச்சர்
மர்ம மனிதன் தொடர்பில் வதந்திகள் பரவுகின்ற போதிலும் இது முழுக்க முழுக்க வதந்தி, கட்டுக்கதை என்று ஒதுக்க முடியாதபடி சில உண்மைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
இம் மர்மமனிதன் தொடர்பான மக்களின் அச்ச உணர்வு தேவையற்றது என முற்றிலும் ஒதுக்கிவிட முடியாது. மர்ம மனிதன் தொடர்பான உண்மைத் தன்மையினை பாதுகாப்புத் தரப்பினர் உறுதிப்படுத்த வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற மர்ம மனிதன் தொடர்பான மிக குழப்பகரமான நிலையினை ஓர் பொறுப்புமிக்க அரசியல் கட்சி என்ற வகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது ஆழ்ந்து உற்று நோக்கி வருகின்றது.
இம்மர்ம மனிதன் தொடர்பான ஓர் அச்சமான சூழ்நிலை மக்களை குழப்பத்திலும், பீதியிலும் ஆழ்த்தியுள்ளது. இதனால் மக்களின் அன்றாட இயல்பு வாழக்கை மிகவும் பாதித்துள்ளதுடன் மக்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்குமான உறவினையும் சீர்குலைத்துள்ளது.
இதனால் பல பகுதிகளில் இளைஞர்கள் வன்முறைகளை நாடவும் பாதுகாப்புத் தரப்பினருக்கு எதிராக செயற்படவும் களம் அமைக்கப்பட்டுள்ளது.
இம் மர்ம மனிதன் தொடர்பில் வதந்திகள் பரவுகின்ற போதிலும் இது முழுக்க முழுக்க வதந்தி, கட்டுக்கதை என்று ஒதுக்க முடியாதபடி சில உண்மைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
குமரகுருபரன், பொதுச் செயலாளர் ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியின்
யாழ். திருநெல்வேலியில் நடமாடிய மர்ம மனிதர்களை விரட்டியடித்த மக்களை அச்சுறுத்தியுள்ளமை அப்பட்டமான மனித உரிமை மீறல் செயலாகும். இதனை கடுமையாக கண்டிக்கின்றோம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமாதானத்தை முன்னெடுப்பதாக தெரிவிக்கும் சூழ்நிலையில் இச்செயல் சேறு பூசுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மர்ம மனிதர்களை விரட்டியத்தால் நாவாந்துறையில் இடம்பெற்றது போன்று கடுமையான பதில் நடவடிக்கைகள் அமையுமென அதிகாரிகள் திருநெல்வேலி பாரதிபுரம் மக்களை அச்சுறுத்தியுள்ளனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதுடன் மக்களை அச்றுத்தும் செயல் ஆகும். எனவே பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை நடத்த வேண்டும்.
யுத்தம் முடிந்து விட்டது, சமாதானம், சுதந்திரம் வந்து விட்டதாக ஜனாதிபதி கூறுகிறார். ஆனால் இராணுவத்தினர் மக்களை அச்சுறுத்துகின்றனர். இது ஜனாதிபதியின் கருத்துக்கு சேறு பூசும் நடவடிக்கையாகும்.
No comments:
Post a Comment