Monday, September 12, 2011

ராஜிவ்காந்தி கொலைக்கு காரணமானவர்களுக்கு தூக்கு தண்டனையை ரத்து செய்ய அரசு செய்ய வேண்டியது என்ன? சாந்தனுக்கும், முருகனுக்கும், பேரறிவாளனுக்கும் வாழ்வளித்து,அவர்கள் அறிவாற்றலை சமுதாயத்துக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்:-திமுக தலைவர் கருணாநிதி!

Monday, September 12, 2011
சென்னை : ராஜிவ் கொலை வழக்கில் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கு, திமுக அரசு கடைப்பிடித்த வழியில் உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றி, அந்த தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்து, அவர்களை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழீழம் அமைய வேண்டும் என்பது என்னுடைய ஆசைகளில் ஒன்று. அந்த ஆசை உரிய நேரத்தில் நிறைவேற முடியாமல் போனதற்கான காரணத்தை அனுபவ ரீதியாக இங்குள்ள தமிழர்கள், ஈழத் தமிழர்கள் உட்பட அனைவரும் அறிவார்கள். 1989ம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிந்து முதல்வராக பொறுப்பேற்ற நான், எனக்கும் அன்றைய பிரதமர் ராஜிவ்காந்திக்கும் இடையே அரசியல் மாச்சர்யங்கள் இருந்தபோதிலும், இந்தியப் பிரதமர் என்ற முறையில், ராஜிவ்காந்தியை சந்தித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று விரும்பினேன். 1989ம் ஆண்டும் பிப்ரவரி 9ம் தேதி டெல்லி சென்றிருந்தேன். என்னுடன் தம்பி முரசொலி மாறனும் வந்திருந்தார்.

பிற்பகலில் சந்திப்புக்கு பிரதமர் அலுவலகத்தில் பத்து நிமிடம் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. நான் ராஜிவ்காந்தியை சந்தித்தபோது, எங்களிடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் மறைந்து போகிற அளவுக்கு அவருடைய இனிய வரவேற்பும், அன்பான வார்த்தைகளும் அமைந்திருந்ததைக் கண்டு நான் வியந்து போனேன்.
அதைவிட வியப்புக்குரியதும், ஆயிரம் வினாக்களை என் இதயத்தில் எழுப்பிடக் கூடியதுமான ஒரு வாசகத்தை அவர் வெளியிட்ட போது, நான் அதிர்ந்து போனேன்.

அகமகிழ்ச்சியால் துள்ளிக் குதித்திருப்பேன். பிரதமருடைய அலுவலகம் என்ற காரணத்தால், அந்த மகிழ்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர் வெளியிட்ட கருத்துக்களில் கவனம் செலுத்தினேன். இதைப் பற்றி இப்போதல்ல; நான் எழுதிய ‘‘நெஞ்சுக்கு நீதி’’ புத்தகத்தில் நான்காம் பாகத்தில் பக்கம் 25லேயே எழுதியிருக்கிறேன்.
அது வருமாறு :

ஒரு முதலமைச்சர், ஒரு பிரதமரை மரியாதை நிமித்தம் சந்திப்பது, அதுவும் இரு வேறு கட்சிகளின் தலைவர்கள் என்கிறபோது; அந்தச் சந்திப்பு மரியாதை அளவில் ஒருசில நிமிடங்கள்தான் நீடிக்கும். ஆனால் ராஜிவ்காந்தியோ, ஈழத் தமிழர் பிரச்சினை குறித்துப் பேச வேண்டும்; அதற்கு வாய்ப்பாக டெல்லியிலே நான் மேலும் இரண்டு நாள் தங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஈழத் தமிழர் பிரச்சினையில் ஒரு திருப்பம் ஏற்படக் கூடும் என்ற நம்பிக்கையோடு, ராஜிவ் விருப்பப்படி டெல்லியில் மேலும் ஒரு நாள் தங்கப் போவதாக, சென்னைக்கு அறிவித்து விட்டு அங்கே தங்கினேன்.

மறுநாள் காலை ஏழு மணிக்கெல்லாம் டெல்லியில் நான் தங்கியிருந்த தமிழ்நாடு அரசு இல்லத்துக்கு ஈழத்தமிழர் பிரச்சினை குறித்த முழுமையான விபரங்களை எனக்கு விளக்கிட, மத்திய அரசின் வெளிவிவகாரத் துறை இணை அமைச்சராக இருந்த நட்வர்சிங்கை, ராஜிவ் அனுப்பி வைத்துவிட்டார். அவருடனும் வெளியுறவுத்துறை அதிகாரிகளுடனும் நானும், தம்பி முரசொலி மாறனும் நீண்ட நேரம் விவாதித்தோம். மாலையில் மீண்டும் பிரதமர் ராஜிவ், நட்வர்சிங், முரசொலி மாறன் மற்றும் அதிகாரிகளுடன் ஒரு கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.

அதைத்தொடர்ந்து, பிரதமருடன் நானும் மாறனும் மட்டுமே, ஈழப் போராட்டம் பற்றிய முக்கிய பிரச்சினைகள் குறித்துப் பேசி னோம். அப்போது மனந்திறந்து பேசிய ராஜிவ், விரைவில் இலங்கைக்கு மாறனையும், வைகோவையும் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளையும், பிரபாகரனைச் சந்தித்து பிரச்சினையை ஒரு முடிவுக்குக் கொண்டு வரத் தேவையான வாய்ப்புகளையும் உருவாக்கிடத்தக்க வழிவகைகளை வகுத்துத் தருவதாகவும், சென்னைக்குச் சென்ற பிறகு மீண்டும் தொடர்பு கொள்வதாகவும் உறுதிபடக் கூறினார்.

அன்றைய தினம் டெல்லியில் மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து கொடுத்த செய்தி வெளியீட்டில் ‘‘இலங்கையில் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, மீண்டும் சந்தித்து, இலங்கைப் பிரச்சினை குறித்து விவாதித்து, வன்முறைக்கு முடிவு காணுகிற சாத்தியக் கூறுகளைக் கண்டறிந்து நல்லிணக்கமும், முழு அமைதியும் ஏற்படுத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று அறிவிக்கப்பட்டது.

இப்படி ஈழத்திற்காக நானும் பாடுபடுவேன் என்று சொன்ன ராஜிவ்காந்தி தமிழகம் வந்தபோது கொல்லப்பட்டு விட்டார் என்பதும், அதைத்தொடர்ந்து நடந்த விரும்பத் தகாத கொடிய வன்முறைச் சம்பவங்களும், எத்தனையோ முறை நானும் நமது தமிழகத் தலைவர்களும், ஏன் இந்தியத் தலைவர்களும் கூட வேண்டி கேட்டுக் கொண்டும், ஈழ விடுதலைப் போராளிகளுக்கிடையே நடந்துக் கொண்டிருந்த சகோதர யுத்தங்களுக்கு முடிவே ஏற்படாமல் ‘புலிகளினால்‘டெலோ’’ போராளிகள் இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினமும்,

அடுத்தடுத்து பத்மநாபா, முகுந்தன் போன்ற விடுதலைப் போராளிகள் இயக்கத் தளகர்த்தர்களும் கொல்லப்பட்டது மாத்திரமல்லாமல்; ஈழப் போரின் ஆரம்ப கட்டமாக போராளிகளைத் தமிழகத்துக்கு அழைத்து வந்து இங்குள்ள தலைவர்களிடமெல்லாம் அறிமுகப்படுத்திய பண்பாளர் அமிர்தலிங்கமும், சகோதர யுத்தத்தில் சிக்குண்டு கொல்லப்பட்ட நிகழ்ச்சியும், தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஒரு தேக்க நிலையை ஏற்படுத்தி விட்டன. இதை உணர்ந்து, தமிழீழ விடுதலையில், ஈழத் தமிழர் பெற வேண்டிய உரிமைகளில் அக்கறை கொண்ட என் போன்றோர் சலித்துத்தான் போக நேரிட்டது.

பிரபாகரனின் உடல் கடற்கரையில் ஒதுங்கிக் கிடக்கிறது’’ என்று கண்ணீரால் எழுதப்பட்ட கதை முற்றுபெறும் வரையில் ஈழ விடுதலைப் போர் நடைபெற்றதையும், போரால் அடிபட்டு, மிதிபட்டு, வதைபட்டு வாடிய தமிழ் மக்கள் பூவும் பிஞ்சுமாக, இலையும் தளிருமாக ஓட ஓட விரட்டப்பட்டு, அகதிகளாக, ஆதரவற்றோராக, அன்றாடம் வயிற்றுப் பசியை அடக்குவதற்கே வழியற்றவர்களாக முள்வேலி முகாம்களில் முடக்கப்பட்டதும், இன்றளவும் தீராமல் தொடருகின்ற துன்பத் தொடர்கதைகளாகவன்றோ நிற்காமல் நீண்டு கொண்டே போகின்றன!

அந்த வேதனை ஒரு பக்கம் இன்னும் நம்மை வாட்டிக் கொண்டிருக்கின்றது. இன்னொரு பக்கமோ ராஜிவ்காந்தியின் கொலைக்குக் காரணமானவர் என்று தூக்குமேடைக்கு அனுப்பப்பட வேண்டியவர்களென மூவரின் பெயர் பட்டியல் நம் முன்னால் தொங்க விடப்பட்டிருக்கிறது. ஆம்; சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி என்றிருந்த நால்வரில், நளினிக்கு தூக்குத் தண்டனையை திமுக அரசு ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கான முறையான ஏற்பாடுகளைச் செய்தது,

இன்றைக்கும் நமக்கு மன ஆறுதலைத் தருகிறது. ஒரு பெண் என்பதால் மற்றும் ஒரு குழந்தையின் தாய் என்பதால், நளினிக்கு கிடைத்துள்ள அந்தச் சலுகை விரிவுபடுத்தப்பட்டு, இருபதாண்டு காலத்துக்கு மேலாக ஏறத்தாழ ஆயுள் தண்டனை கைதிகளைப் போல சிறையிலே இருந்து வாடிய சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய இவர்களை; தொடர்ந்து கைதிகளாகவே இருந்திடச் செய்யாமல், அவர்களை விடுவித்திடவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், கருணை காட்டப்பட வேண்டும், அவர்கள் மீதான குற்றம் மிகப் பெரியது என்ற போதிலும், அவர்கள் அனுபவித்த தண்டனைக் காலத்தை மனதிலே கொண்டு மனிதாபிமானத்தோடு இரக்கம் காட்ட முன் வர வேண்டும் என்று ஏற்கனவே நான் கூறியிருக்கிறேன். இப்பொழுதும் அதையே கூறுகிறேன்.

இதுபோன்ற நிகழ்வுகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கிட, ஒரு மாநில அரசு எந்த விதிமுறைப்படி அவர்களின் மரண தண்டனையை மாற்றியமைக்க முடியுமோ, அவ்வாறு தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பில் இருந்தபோது மாற்றியமைத்து அவர்களை வாழ விட்டிருக்கிறது என்பதற்கு கடந்த கால உதாரணங்களாக தியாகு, கலியபெருமாள் போன்றவர்கள் திகழ்கிறார்கள். இப்போதும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற தியாகு, நல்ல எழுத்தாளராக, கட்டுரையாளராக, புத்தகங்கள் வெளியிடுபவராக, இந்தச் சமுதாயத்தில் இப்போது மதிப்புடன் உலவுவதைப் பார்த்தாவது சாந்தனுக்கும், முருகனுக்கும், பேரறிவாளனுக்கும் வாழ்வளித்து,

அவர்கள் அறிவாற்றலை சமுதாயத்துக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது என்னவோ! ராஜிவ்காந்தி கொலைக்கு காரணமானவர்களுக்கு அளிக்கும் பரிசு என்று யாரும் கருதாமல், இதுதான் அவர்களுக்குரிய தண்டனை என்று நினைப்பதால் கேடு ஒன்றும் விளைந்திடாது.

இன்றைய தமிழக அரசும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதோடு கடமை முடிந்து விட்டதாகக் கருதாமல், மனித நேயத்தோடு பிரச்சினையை உண்மையிலேயே அணுக வேண்டுமானால், அதற்குரிய விதிமுறைப்படி ஏற்கனவே திமுக அரசில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைப் படி உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, அதிலே இந்த மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி, அந்த தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்து, அவர்களை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment