Friday, September 16, 2011

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் கவலையளிப்பதாக பிரித்தானிய தெரிவிப்பு!

Friday, September 16, 2011
இலங்கையின் இறுதிக்கட்ட மோதலில் இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் கவலையளிப்பதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டெயார் பேர்ட் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இந்த விடயங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள போதிலும் அவை இதுவரை நிறைவடையவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் நிலையான சமாதானத்தினை ஏற்படுத்துவதற்கு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டெயார் பேர்ட் கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கையை ஒற்றுமையான நாடாக உருவாக்குவதற்கு ஐக்கிய இராச்சியம் சந்தர்ப்பமும், ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என கென்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரொருவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்கு முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரைன் பின்லி தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கையில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெற்று வரும் நடவடிக்கைகள் குறித்தும் இருதரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இடம்பெயர்ந்துள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவதற்கும் நிலையான அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கும் இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கென்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரைன் பின்லி குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்ட பிரைன் பின்லி வெளியில் இருந்து பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள் நிறைந்த சூழல் அதற்கு சாதகமாக அமையாது என்றும் கூறினார்.

சுயாதீனமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட இடமளிப்பதன் மூலம் இலங்கை அரசாங்கம் தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ள முடியுமென பிரைன் பின்லி தெரிவித்தாக பீ.பீ.சி செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment