Thursday, September 8, 2011

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புற பகுதிகளில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் அடிப்படை தேவைகள் எதுவும் இதுவரையில் பூர்த்திசெய்யப்படவில்லை-மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம்.(பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்)

Thursday, September 08, 2011
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புற பகுதிகளில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் அடிப்படை தேவைகள் எதுவும் இதுவரையில் பூர்த்திசெய்யப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலர் இதுவரையில் தமது பகுதிகளில் குடியேற்றப்படாமல் உள்ளதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட சின்னவத்தை பகுதியின் எல்லைப்பகுதியில் 1990 ஆம் ஆண்டுக்கு முன்பாக குடியிருந்த சுமார் 84 குடும்பங்கள் அப்பகுதியில் இதுவரையில் குடியேற்றப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்திலேயே இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற இந்த இந்தக்கூட்டத்தில் மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம், மாசிலாமணி, பிரதேச செயலாளர் உதயசிறிதர் உட்பட திணைக்கள தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

தாம் 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த பகுதியில் இதுவரை குடியமர்த்தப்படவில்லையென தெரிவித்த குறித்த பகுதி மக்கள் தாம் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள பகுதியில் எதுவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் உள்ளதாக சுட்டிக்காட்டினர்.

சின்னவத்தை, நவகிரிநகர், 25ஆம் கொலணி தொடக்கம் 39ஆம் கொலணி வரையிலான பகுதி மக்கள் 2007ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போதிலும் இதுவரையில் தமது அடிப்படை தேவைகள் எவையும் பூர்த்தி செய்யப்பட வில்லையென கவலை தெரிவித்தனர்.

அத்துடன் இரணமடு, மாலையர்கட்டுப்பிரதேச மக்களும் தாம் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போதிலும் இதுவரையில் எதுவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்,

இடம்பெயர்ந்த மக்கள் சொந்த இடங்களில் மீள குடியமர்த்தப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாகவுள்ளேன். அதிலும் தமிழ் மக்கள் தங்களது எல்லைப்பகுதியில் குடியேற வேண்டும்.

கடந்த காலத்தில் அதிகாரிகள் விட்ட தவறுகள் காரணத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் முற்றாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்ததன் காரணமாகவே இங்கு வரவேண்டிய பணிகள் வடக்கு நோக்கி திருப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் இது ஒரு முக்கிய பிரச்சினையென்ற காரணத்தினால் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment