Tuesday, September 27, 2011

ஜனாதிபதி நியுயோக்கிலிருந்து நாடுதிரும்பினார்!

Tuesday, September 27, 2011
அமெரிக்க நிவ்யோக் நகரில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் 66 வது பொது சபை அமர்வில் கலந்து கொள்ள சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை நாடுதிரும்பினார்.

அவர் இன்று அதிகாலை 5.30 அளவில் சிறிலங்கன் வானூர்தி சேவையின் யு.எல்.228 வானூர்தியில் டுபாய் ஊடாக வந்தடைந்ததாக எமது வானூர்தி நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொது அமர்வில் கலந்து கொண்டு கடந்த 23 ம் திகதி உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கை தற்போது பயங்கரவாதம் அற்ற நாடு என குறிப்பிட்டிருந்தார்.

நாட்டு மக்களை அமைதியான சூழ்நிலையில் வாழ வைப்பதற்கான நடவடிக்கைகளை தமது அரசாங்கம் முன்னெடுத்துள்;ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தாம் மேற்கொண்டு வரும் வழிமுறைகள் குறித்தும் சர்வதேச தலைவர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெளிவு படுத்தியுள்ளார்.

இதுதவிர, வடக்கின் அபிவிருத்திகள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு நடவடிக்கைகள் என்பன குறித்தும், அவர் விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜனாதிபதி நியுயோர்க் நகரில் தங்கியிருந்த காலப்பகுதியில், ஐக்கிய நாடுகள் பொது செயலாளர் பான் கீமூன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பெரக் ஒபாமா உள்ளிட்ட அரச தலைவர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment