Tuesday, September 20, 2011

சர்வ மதத் தலைவர்கள், சமூகத் தலைவர்களின் வடமாகாண சுற்றுலா!

Tuesday, September 20, 2011
இலங்கை தேசிய சமாதான பேரவை National Peace Council of Sri Lanka ஏற்பாடு செய்த காலி, மாத்தறை, குருனாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்ட சர்வ மதத் தலைவர்கள் மற்றும் சமூகத் தலைவர்களின் வடமாகாண சுற்றுலாவின் ஓர் அங்கமான, புத்தளம் மற்றும் வடமாகாண அபிவிருத்தி செயற்பாடுகள், பண்முகத்தன்மையுடைய பிரதேசங்களை மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிடும் நிரலிற்கு அமைய புத்தளம் பெரியபள்ளி, காற்றாடி மின் ஆலை, உப்பளம் ஆகியவற்றை இக் குழுவினர் சென்று பார்வையிட்டனர்.

புத்தளம் பெரியபள்ளிக்கு வருகை தந்த பௌத்த பிக்குமார் / பிக்குணியர், கத்தோலிக்க பாதிரி, மௌலவிமார் உட்பட ஆண் பெண் சமூக தலைவர்களைக் கொண்ட குழுவினரை பெரியபள்ளி நிருவாக சபைத் தலைவர் எஸ்.ஆர்.எம். முஸம்மில் அவர்கள் வரவேற்றார். மத்ரஸது ரவ்ழதுல் ஹாபிழீன் மாணவர்கள் குழுவினரை பள்ளிவாசலுக்குள் அழைத்து வந்தனர்.

இக் குழுவினருக்கு புத்தளம் பிரதேசத்திற்கும் கண்டி ராசதானிக்கும் இடையிலான பிணைப்பு, இபுனு பதூதாவின் வரலாற்றுக் குறிப்பு, பள்ளிவாசலின் வரலாறு ஆகியன குறித்து சிங்கள மொழியில் விளக்கப்பட்டதுடன், கடிகாரத்தின் அலாரம் இயக்கச் செய்து மணி அடித்துக் காட்டப்பட்டது. அங்கிருந்து காற்றாடி மின் ஆலைக்கு சென்ற குழுவினர் மேற்குக் கரை வீதி வழியாக உப்பளத்தையும் பார்வையிட்டனர்.

இக் குழுவில் வருகை தந்த சில பிரமுகர்களை சந்தித்து புத்தளம் தொடர்பாக வினவியபோது:
P.W. நெல்சன் – கத்தோலிக்க பாதிரி (காலி கிரித்துவ ஆலயம்)
நான் சிறுவனாக இருந்த போது புத்தளம் வந்துள்ளேன். இன்று அது பாரிய அபிவிருத்தி அடைந்த நகரமாகக் காணுகின்றேன். மக்கள் மத்தியில் நிலவும் நட்புறவு, நெருக்கம், பிறர் கருத்துக்களை மதித்தல் மற்றும் கருத்தியல் பரிமாற்றம் போன்றவையும் குறிப்பிடக் கூடிய சிறப்புக்களாக கூறுவேன்”
T.H. வீரசேன – பணிப்பாளர், ஆயுர்வேத ஔடத கூட்டுத்தாபணம் / முன்னாள் பிரதேச சபைத் தலைவர், கரந்தெனிய
புத்தளத்திற்கு இது எனது முதல் வருகை. புத்தளம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நகரமானாலும் எல்லா இனத்தவரும் இணைந்து வாழுவது தெரிகின்றது. புத்தளத்தின் புராதணத் தன்மையும் என்னை கவர்ந்துள்ளது” எனக் கூறினார்.

மேலும் சிலரிடம் புத்தளம் தொடர்பாகக் கேட்டபோது:

ஆசிரியை ஒருவர்: “முஸ்லிம் பள்ளிவாசல்களில் பெண்கள், குறிப்பாக முஸ்லிமல்லாத பெண்கள் நுழையக் கூடாது என்று தான் அறிந்திருந்தேன். எங்களை பள்ளிக்குள் அழைத்து மரியாதை செய்தது பெருமையாக இருக்கின்றது”.
பாடசாலை மாணவி: “புத்தளம் உப்புக்கு பிரசித்தம் எனத் தெரியும். அதனால் புத்தளம் என்றவுடன் காய்ந்த வரண்ட பழமையான பிரதேசம் என்ற ஒரு கற்பனை இருந்தது. இந்தளவு அபிவிருத்தி அடைந்த நகரம் என்று நினைத்திருக்கவில்லை. புத்தளம் மக்களின் விருந்தோம்பல், நட்புறவு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சுருங்கக் கூறின், புத்தளம் இனி புத்தளத்துக்குள் சுருங்கக் கூடாது என்ற செய்தி மிகப் பலமாக கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment