Tuesday, September 06, 2011இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது பீரங்கி மற்றும் விமானத் தாக்குதல்களை நிறுத்திக் கொள்வதாக அரசாங்கம் அறிவித்ததன் பின்னரும் பாதுகாப்பு வலயத்தின் மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களைக் காட்டும் சற்றலைட் படங்களை அமெரிக்க தூதரக அதிகாரிகள் இலங்கை அரசிடம் காண்பித்துள்ளதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தெரிவித்திருக்கின்றது.
அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக வெற்றியை அறிவிப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், அமெரிக்க தூதரக பொறுப்பதிகாரி ஜேம்ஸ் ஆர். முவர், அந்தப் படங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவ்வேளையில் வெளியுறவுச் செயலாளராக இருந்த பாலித்த கொஹனவுக்கும் காண்பித்துள்ளதாக விக்கிலீக்ஸ்தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் பி.பி.சி.யில் வெளியான செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2009 மே 5 ஆம் திகதி உதவி வழங்கும் நாடுகளின் தூதுவர்களுடன் நடத்திய சந்திப்பைத் தொடர்ந்து தனக்கு ஜனாதிபதியையும் பாலித்த கொஹனவையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் வெள்ளை மாளிகைக்கு ஒரு பிரதியுடன் வெளியுறவு அமைச்சருக்கு அனுப்பிய இராஜாங்க தகவல் பரிமாற்றமொன்றில் மூவர் கூறியுள்ளார்.
ஏப்ரல் 27 ஆம் திகதியன்று கடுமையான பீரங்கி மற்றும் ஷெல் தாக்குதல்களை நிறுத்திக் கொள்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தது முதல் அரசாங்க படைகள் பாதுகாப்பு வலயம் மீது ஷெல் தாக்குதல்கள் எதனையும் நடத்தவில்லையென்ற நிலைப்பாட்டிலேயே அவர் இருப்பதாகவும் அந்த இராஜாங்க தகவல் பரிமாற்றம் கூறுகின்றது.
போர் இறுதி நாட்களில் எடுக்கப்பட்ட சற்றலைட் படங்களில் ஒன்று மே 2 ஆம் திகதி மருத்துவமனையொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக விடுதலைப் புலிகள் கூறிய இடத்தில் மருத்துவமனையெதுவும் இருக்கவில்லையென்று ஜனாதிபதி மேலும் வலியுறுத்தியதாகவும் விக்கிலீக்ஸ் ரகசிய கசிவு சுட்டிக்காட்டியுள்ளது.
சிவில் மக்களுக்கான பாதுகாப்பு வலயத்தில் ஆட்லெறி தாக்குதல் ஏற்படுத்திய சேதங்களைக் காட்டும் விதத்தில் ஏப்ரல் 26 மற்றும் 28 ஆம் திகதிகளில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் செற்றலைட் படங்களை வெளியுறவு அமைச்சராக இருந்த ரோஹித்த போகொல்லாகமவிடமும் அமெரிக்க தூதரக பொறுப்பதிகாரி காண்பித்ததாகவும் கூறியுள்ளார்.
ஜனவரி 2009 இலிருந்து ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறும் உத்தியோகபூர்வமற்ற ஐ.நா. புள்ளி விபரங்களையும் அமெரிக்க தூதரக அதிகாரி அமைச்சரிடம் சுட்டிக் காட்டியுள்ளார். இதன்போது எங்கிருந்து யாரால் ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பதை உறுதிப்படுத்தும் தகவல்களை சற்றலைட் படங்கள் காண்பிக்காது என்று ரோஹித்த போகொல்லாகம கூறியுள்ளார்.
இந்தியாவும் அமெரிக்காவும் அவதானித்தன
யுத்த களத்தின் உண்மையான நிலைவரம் பற்றி ஜனாதிபதி அறிந்திருக்க மாட்டார் என்ற தனது ஊகத்தை கூறியுள்ள இவர், அந்த சந்திப்பின் பின்னர் இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்கு ஜனாதிபதி தள்ளப்படுவார் என்றும் தகவல் பரிமாற்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்புக்கு முன்னர் பகலுணவு போசனத்தின்போது இலங்கையின் யுத்த களத்தில் என்ன நிலைமை என்று இந்தியாவும் சற்றலைட் மூலம் அவதானித்துக் கொண்டிருப்பதக ஜனாதிபதி கூறியுள்ளார் என்றும் தாங்களும் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கறோம் என்பறு இலங்கை அரசுக்குப் புரிந்திருக்கும் என்றும் அமெரிக்க தூதரக அதிகாரி வெள்ளை மாளிகைக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கும் அனுப்பிய இராஜாங்க தகவல் பரிமாற்றத்தில் கூறியிருப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment