Friday, September 2, 2011

கிறீஸ் மனிதன் விவகாரம் - குருநகரில் பதட்டம் - படையினர் குவிப்பு – பொதுமக்கள் காயம்!

Friday, September 02, 2011
யாழ்.குடாநாட்டினை கலக்கி வரும் கிறீஸ் மனிதன் விவகாரம் நேற்று இரவு குருநகரையும் கலங்கடித்துள்ளது.மக்கள் குடியிருப்பு பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய மூவரை பொதுமக்கள் பிடிக்க முற்பட்டதையடுத்து வன்முறை வெடித்திருந்தது.குருநகரின் சின்னக்கடை முதல் தண்ணீர் தாங்கியடி வரையான பெரும் பகுதி இரவிரவாக சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கினில் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. உள்ளேயிருந்து எவரும் வெளியேறவோ அதே போன்று வெளியாட்கள் உட்செல்லவோ படையினர் அனுமதித்திருக்கவில்லை.

குறித்த சந்தேக நபர்கள் வீடொன்றினுள் பதுங்கிக்கொண்டதாகவும் பின்னர் துரத்தி வந்த பொதுமக்களை ஆயுதங்களைக் காட்டி மிரட்டியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.இந்நிலையில் குறித்த சந்தேக நபர்கள் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன. நான்கிற்கும் அதிகமான பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக முதற் கிடைத்த செய்திகள் தெரிவித்தன.ஊடகவியலாளர்கள் உட்பட எவரும் உள்ளே அனுமதிக்கப்படாமையால் தகவல்கள் உறதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

யாழ் போதனாவைத்தியாலைக்கு சிகிச்சைக்கென சிலர் அங்கிருந்து வந்திருந்ததாகவும் விடுதியினில் தங்கியிருந்து சிகிச்சை பெற அச்சங்கொண்டு அவர்கள் வெளியேறிவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.நள்ளிரவு தாண்டியும் பதற்றம் நீடித்தது.
இதனிடையே சுழிபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவர் பொதுமக்களிடம் அகப்பட்டுள்ளார். சுமார் 65 வயதுடைய சந்தேக நபர் பின்னர் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார். அவர் ஒரு மன நோயாளியென பொலிஸார் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு கொக்குவில் பகுதியினில் கைது செய்யப்பட்ட 22 பேரில் இருவர் யாழ்.போதனாவைத்தியசாலையில் அடிகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அறுவர் நீதிமன்றினில் ஆஜர் செய்யபபட்டுள்ள நிலையில் அவர்களை பிணையினில் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

No comments:

Post a Comment