Monday, September 19, 2011

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் மரபு மீறிய செயல் கடும் தொனியில் கடிதம் எழுத முடிவு!

Monday, September 19, 2011
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அரசாங்கத்துடனான அடிப்படை இராஜதந்திர முறைகளுக்கு முற்றிலும் முரணான ரீதியில் நடந்துகொண்டதை கண்டிக்கும் வகையில் மூனுக்கு எதிராக கடுமையான கடிதம் ஒன்றை அனுப்பி வைக்குமாறு ஐ.நா.வுக்கான இலங்கை நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கோஹனவுக்கு அரசாங்கம் பணித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்களை ஆதாரம் காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்துக்கு முன்கூட்டியே அறிவிக்காத வகையில் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிவைத்த விவகாரம் தொடர்பில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை அரசாங்கம் வெகுவாக சாடியுள்ளது.

ஜெனிவாவுக்கு மேற்படி அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டமை எம்மை மிகவும் ஏமாற்றமடையச் செய்துள்ளது என இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் மற்றும் ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவை என்பவற்றையும் இலங்கை சாடியுள்ளது.

அரசாங்கத்துக்கு முன்கூட்டியே அறிவிக்காமல் மேற்படி அறிக்கையை மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிவைத்துள்ளமையானது அடிப்படை இராஜதந்திர மரபுகளை மீறுவதாக அமைந்துள்ளது என குற்றம் சாட்டியுள்ள இலங்கை இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கத்துக்கு எதுவும் வெளிப்படுத்தப்படாமல் மூடிமறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாகவே இதனைக் கண்டிக்கும் வகையில் கடும் தொனியிலான அறிக்கை ஒன்றை பான் கீ. மூனுக்கு அனுப்பிவைக்குமாறு பாலித கொஹனவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment