Friday, September 23, 2011

அதிமுகவிடம் பாச்சா பலிக்கவில்லை! தேமுதிக தனித்துப் போட்டி! மேயர் வேட்பாளர்களை அறிவித்த விஜயகாந்த்!.

Friday 23rd of September 2011
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த (அக்டோபர்) மாதம் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மனுதாக்கல் தொடங்கி விட்டதால் தேர்தல் சூடு பிடித்துள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்த அறிவிக்கும் பணிகளில் முக்கிய கட்சிகள் ஈடுபட்டுள்ளன.அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர்.

கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்தின் தே.மு.தி.க. முக்கிய அங்கம் வகித்தது. அந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தடவை அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுமா? என்ன முடிவு எடுக்கும்? என்பதை அனைவரும் எதிர்பார்த்தனர்.

காங்கிரஸ் கட்சியுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும் என்றும் தகவல்கள் வெளியானது. தே.மு.தி.க.வுடன் காங்கிரஸ் இணைந்து போட்டியிடும் மாநகராட்சிகள் குறித்து பேசி முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும் கூட இன்று காலை தகவல்கள் வெளியானது. இடதுசாரிகள் மற்றும் சில கட்சிகளுடன் சேர்ந்து தே.மு.தி.க. தனி அணி அமைக்கும் என்றும் கருதப்பட்டது.

இந்த நிலையில் தே.மு.தி.க. உள்ளாட்சி தேர்தலை தனியாக களத்தில் நின்று சந்திக்கும் அதிரடி முடிவை இன்று எடுத்தது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று காலை 9 மாநகராட்சிகளுக்கான தே.மு.தி.க. மேயர் வேட்பாளர்களை அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட தே.மு.தி.க. முதல் வேட்பாளர் பட்டியல் விவரம் வருமாறு:-

சென்னை-கோ. வேல் முருகன் (தே.மு.தி.க. தொழிற் சங்க பேரவை தலைவர்) மதுரை-கா.கவியரசு (மதுரை மாநகர் மாவட்ட கழக அவைத் தலைவர்) கோயம்புத்தூர்-ஆர். பாண்டியன்(கோவை வடக்கு மாவட்ட கழக செயலாளர்) சேலம்-ஏ.ஆர்.இளங் கோவன்(கழக துணை செயலாளர்) திருநெல்வேலி-ஏ.சீதா லட்சுமி. வேலூர்-எஸ். சத்திய வாணி சுரேஷ்பாபு. ஈரோடு- என்.எஸ். சிவக்குமார் (ஈரோடு தெற்கு மாவட்ட கழக செய லாளர்) திருப்பூர்-என். தினேஷ் குமார் (திருப்பூர் வடக்கு மாவட்ட கழக செயலா ளர்) தூத்துக்குடி - எஸ். ராஜேஷ்வரி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதன் மூலம் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் ஒவ்வொரு கட்சிக்கும் இருக்கும் உண்மையான பலம் என்ன என்பது தெரிந்து விடும்.

No comments:

Post a Comment