Monday, September 26, 2011

ஜே.வி.பி இனி கூட்டமைப்பு அரசியலில் ஈடுபடாது-அநுரகுமார திசாநாயக்க!

Monday, September 26, 2011
ஜே.வி.பி எதிர்காலத்தில் கூட்டமைப்பு அரசியலில் ஈடுபடாது என்ற தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அதன் அரசியல் குழு உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் தமது கட்சி மேற்கொண்ட கூட்டமைப்பு அரசியல் காரணமாக கட்சிக்கு எந்தவித பயனும் ஏற்படாத காரணத்தினாலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

இதேவேளை, ஜே.வி.பி கட்சித் தலைமையகமான பத்தரமுல்லை – பெலவத்தை காரியாலத்தில் உள்ள மாற்றுக்கொள்கை குழு உறுப்பினர்கள் தொடர்பில் இன்று இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

அந்த செய்தியில், தலைமையகத்தில் உள்ள மாற்றுக்கொள்கை குழு உறுப்பினர்களுக்கு பகலுணவோ, தேனீரோ வழங்கப்படுவதில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட அனுர குமார திசாநாயக்க, அண்மைக்காலமாக மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்குகொள்ளாமல் இருக்கின்ற உறுப்பினர்களை கட்சியில் இருந்து விலகிச் சென்றதாக கருதியே செயற்படுவதாக குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், ஜே.வி.பியின் மாற்றுக் கொள்கை குழு தற்போது மாவட்ட ரீதியாக தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக அதன் உறுப்பினர் ஒருவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

சமூக நலன் ரீதியாக புதிய அரசியல் நடவடிக்கைகளை நாட்டில் தோற்றுவிப்பதற்கு இந்த மாற்றுக்கொள்கை அரசியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதுதவிர, ஜே.வி.பியின் உத்தியோகபூர்வ நாளிதழான 'நியமுவா' உட்பட ஏனைய பிரசார நடவடிக்கைகள் தம்மிடம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

எனினும், கட்சியின் நிதித்துறையின் அதிகாரம் தம்மிடம் இல்லை என மாற்றுக்கொள்கை குழுவின் உறுப்பினர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment