Thursday, September 22, 2011

தென்னிந்திய அளவில் எச்ஐவி, எய்ட்ஸ் பாதிப்பில் ஆந்திராவுக்கு முதல் இடம்!

Thursday, September 22, 2011
சென்னை : தென்னிந்தியாவை பொறுத்தவரை எச்ஐவி, எய்ட்ஸ் பாதிப்பில் ஆந்திர மாநிலம் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்திய தொழில் கூட்டமைப்பு, எச்ஐவி மற்றும் எய்ட்சுக்கான இந்திய வர்த்தக அறக்கட்டளை இணைந்து, எச்ஐவி & எய்ட்ஸ் குறித்த தேசிய மாநாட்டை சென்னையில் நேற்று நடத்தியது.

இந்திய தொழில் கூட்டமைப்பின் தென்மண்டல தலைவர் லதா ஜெகநாதன் தலைமை வகித்தார். உறுப்பினர் சுமன்த் சி.ராமன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் வி.பழனிகுமார் தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 1.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்களில் அதிக அளவில் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களில் 57 சதவீதம் கிராமப்புற பகுதியைச் சேர்ந்தவர்கள். 38 சதவீதம் பெண்கள், 37 சதவீதம் இளைஞர்கள். 53 ஆயிரம் பேர் மருந்து சாப்பிட்டு வருகின்றனர். இதில், 6 ஆயிரம் பேர் குழந்தைகள். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்து, மாத்திரைகள் வாங்குவதற்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் பாதிப்பில் ஆந்திர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.

இங்கு 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா 2வது இடத்திலும், தமிழ்நாடு 3வது இடத்திலும், கேரளா 4வது இடத்திலும் இருக்கிறது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் வேலை செய்யும் 93 சதவீதம் பேருக்கு எய்ட்ஸ் குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர்கள் சி.பார்த்தசாரதி (ஆந்திரா), கே.சைலஜா (கேரளா) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

2.60 லட்சம் குழந்தைகள் பலி

உலக அளவில் 2009ம் ஆண்டு கணக்குப்படி 20 லட்சத்து 60 ஆயிரம் பேர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 80 ஆயிரம் பேர், எய்ட்ஸ் நோயால் இறந்துள்ளனர். இதில், 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. எச்ஐவியால் பாதிக்கப்பட்ட 1 கோடியே 50 லட்சம் பேரில், மூன்றில் ஒரு பகுதியினர் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment