Monday, September 5, 2011

சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா நேரில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

Monday,September,05,2011
புதுடெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் கோர்ட்டில் நேரில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 1991 முதல் 96ம் ஆண்டு வரை முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடிக்கு சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை தனி கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. 2001ல் ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார்.

இதையடுத்து, திமுக பொதுச் செயலாளர் தாக்கல் செய்த மனுவை ஏற்று, வழக்கு விசாரணையை பெங்களூர் கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட். அதன்படி, 2004ம் ஆண்டு முதல் பெங்களூர் கோர்ட்டில் சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நடந்து வருகிறது. சாட்சிகள் விசாரணை முடிந்ததை தொடர்ந்து, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என பெங்களூர் கோர்ட் நீதிபதி மல்லிகார்ஜுனய்யா உத்தரவிட்டார்.

சசிகலா, இளவரசி மட்டும் கோர்ட்டில் ஆஜராயினர். உடல்நிலையை காரணம் காட்டி சுதாகரன் ஆஜராகவில்லை. ‘முதல்வராக இருப்பதால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். எழுத்து பூர்வமாக கோர்ட்டின் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் தேவைப்பட்டால் வீடியோ கான்பரன்சிங் மூலம் பதில் அளிக்கவும் அனுமதிக்க வேண்டும்’ என கோரி ஜெயலலிதா தரப்பில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதா கோரிக்கைக்கு அரசு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, ஜெயலலிதா தாக்கல் செய்த மனுக்களை கடந்த மாதம் 12ம் தேதி பெங்களூர் கோர்ட் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக முதல்வராக இருப்பதாலும் மற்றும் பல்வேறு காரணங்களாலும் கோர்ட்டில் ஆஜராக முடியவில்லை. எனவே, நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் பதில் அளிப்பதை பெங்களூர் கோர்ட் ஏற்றுக்கொள்ள உத்தரவிட வேண்டும் அல்லது எழுத்து பூர்வமான பதிலை ஏற்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மாவை கொண்ட பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘‘குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்பது சட்டத்தின் நியதியாகும். விசாரணையை தாமதப்படுத்த வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா இவ்வாறு மனு தாக்கல் செய்துள்ளார். இதை ஏற்றுக் கொள்ள முடியாது.

கிரிமினல் நடைமுறை சட்டம் பிரிவு 313ன்படி, குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும். அதற்கு விலக்கு அளிக்க முடியாது. எப்போது ஆஜராக முடியும் என்ற தகவலை தெரிவித்தால் அதற்கு ஏற்ப உத்தரவு பிறப்பிக்கப்படும். அடுத்த வாரம் திங்கள்கிழமை பதில் கூறுங்கள்’’ என்று ஜெ. தரப்பு வக்கீலுக்கு உத்தரவிட்டனர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து, பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் நாளை (செவ்வாய்கிழமை) ஆஜராக வேண்டும் என்று ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனி கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment