Thursday,September, 29, 2011கொழும்பு:நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த மாதங் களில் ஏற்பட்ட அசாதா ரண சூழ்நிலைக்கு சிவில் பாதுகாப்பு கமிட்டி சரியாகச் செயற்படாமையே காரணம் எனத் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, சிவில் பாதுகாப்பு கமிட்டிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
யுத்த காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் சிவில் பாதுகாப்புக் கமிட்டிகள் செயற்பட்டுவந்தபோதும், யுத்தத்தின் பின்னர் அவற்றின் செயற்பாடுகளைச் சரியாகக் கவனிக்காமையால் அண்மைய மாதங்களில் கிaஸ் மனிதன் போன்ற குழப்ப நிலைகள் ஏற்பட்டன. இவ்வாறான நிலைமைகள் ஏற்படாமல் அமைதியான, சமாதானமான சூழலை நிலைத்திருக்கச் செய்வதற்கு சிவில் பாதுகாப்பு கமிட்டிகள் மீண்டும் கட்டியெழுப்பப்படுமென அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு றோயல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற சிவில் பாதுகாப்பு கமிட்டியின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாறு கூறினார். இந்த நிகழ்வில் சிவில் பாதுகாப்பு கமிட்டி தொடர்பான ஜனாதிபதியின் இணைப்பாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே, பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோன், சிவில் பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர திஸாநாயக்க, மும்மதத் தலைவர்கள் உட்பட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இங்கு மேலும் உரையாற்றிய அவர், பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் நெருக்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே சிவில் பாதுகாப்புக் கமிட்டி உருவாக்கப்பட்டது. இதன் ஊடாக தமது பிரதேசத்திலுள்ள பிரச்சினைகள் மக்கள் பொலிஸாருடன் இணைந்து தீர்த்துக்கொள்ள முடியும். சிவில் பாதுகாப்பு கமிட்டிகள் சரியாகச் செயற்படாமையாலேயே அண்மைய மாதங்களில் கிaஸ் மனிதன் போன்ற அசாதாரண சூழ்நிலைகள் ஏற்பட்டன.
மீண்டும் சிவில் பாதுகாப்பு கமிட்டிகளை கட்டியெழுப்பி அமைதிச் சூழலை தொடர்ந்தும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களின் பாதுகாப்பும் அவசியமானது. இதேபோலவே, கொழும்பு நகரைத் தூய்மையாக வைத்திருப்பதற்கு பொலிஸ் திணைக்களத்தில் சுற்றாடல் பிரிவொன்றை ஆரம்பித்து சுற்றாடலைப் பாதுகாத்து வருகின்றோம். தற்பொழுது கொழும்பு நகரம் அழகாகக் காணப்படுகிறது.
இலங்கைக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதியைச் சந்திக்கும்போது ஆசியாவிலேயே மிகவும் சுத்தமான நகரம் கொழும்பு நகரம் என்பதைக் கூறிச்செல்கின்றனர். இதனைத் தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டும். அத்துடன் கொழும்பிலுள்ள குறைந்த வருமானம் பெறுபவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி அவர்களுக்குப் சிறந்த வீடுகளை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
30 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இன்று வரை 17ஆயிரத்து 500 வீடுகளை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் கொழும்பு நகரை சிறப்பான நகரமாக மாற்றவிருக்கின்றோம். இதற்கும் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமானது என்றும் அவர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment