Thursday, September 29, 2011

அபிவிருத்தி அடைந்த நாடுகளிடமிருந்து உதவிகளை பெறமுடியாது!

Thursday,September, 29, 2011
கொழும்பு:அபிவிருத்தி அடைந்த நாடுகளிடம் இருந்து அரசாங்கத்தினால் உதவிகளை பெற்றுக் கொள்ள முடியாது என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுகின்றார்.

ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே மாநகர சபை சார்பில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் எதுல்கோட்டே பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே எதிர்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த அரசாங்கத்தை உதவிகள் இன்றி முன்னேற்ற முடியாது என அரசாங்கத் தரப்பினரே குறிப்பிடுவதாகவும், மக்களின் உதவிகளுடன் எவ்வாறான அபிவிருத்திகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என்றும் ரணில் விக்ரமசிங்க இதன்போது வினவினார்.

நாட்டை முன்னேற்றுவதற்குப் போதுமான நிதி அரசாங்கத்திடம் இருக்கின்றதா என்று கேள்வியெழுப்பிய எதிர்கட்சி தலைவர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 10 மாத கடன் தொகையையும் எடுத்துள்ளதாக கூறினார்.

அரசாங்கம் வங்குரோந்து நிலையை அடைந்துள்ளது என்றும், இந்த அரசாங்கத்திற்கு அபிவிருத்தி அடைந்த நாடுகளிடம் இருந்து உதவிகளை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்று அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் அரசாங்கம் மோதுகின்ற அதேவேளை, மனித உரிமைகள் குறித்த விசாரணைகளையும் எதிர்நோக்கியுள்ள நிலையில் அந்த நாடுகள் ஒரு சதமேனும் உதவியை வழங்க மாட்டார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment