Saturday, September 17, 2011

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சர்வதேச உதவிகள் தேவை – முரளீதரன்!

Saturday, September 17, 2011
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சர்வதேச ரீதியான உதவிகள் அவசியமானது என இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற துயரமான அனுபங்களை மீட்டிப்பார்ப்பதனை விடவும், எதிர்காலத்தை கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக செல்வந்த நாடுகள் இலங்கையின் வடக்கு பிரதேசத்திற்கு உதவிகளை வழங்க முன்வர வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் தொடர்பில் பேசுவதில் அர்த்தமில்லை கசப்பான அனுபவங்களை மீட்டிப் பார்ப்பதனால் எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் என்பது யுத்தமே, யுத்தத்தின் போது இழப்புக்கள் ஏற்படுவது வழமையானதே என அவர் தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் கூட்டுப்படையினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்திருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுவே யுத்தம், யுத்தத்தின் போது இழப்புக்கள் ஏற்படுவதனை தடுக்க முடியாது, அதே நிலைமையே இலங்கையிலும் ஏற்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு உதவிகளை வழங்க வெளிநாடுகள் முன்வர வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளாது, யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மெய்யாகவே உதவி வரும்புவோர் உதவிகளை வழங்குவார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
முத்தையா முரளீதரன் வடக்கில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்டங்களை அரம்பிக்கவுள்ளார்.

2004ம் ஆண்டு ஆழிப்பேரலை அனர்த்தத்தின் போதும் முரளீதரன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் பாரியளவில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், வெளிநாட்டு அரசாங்கங்கள் மட்டுமன்றி தனிப்பட்ட நபர்களினதும் உதவிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளின்றி மக்கள் அவதியுறுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் யுத்தம் ஏற்படுவதற்கு அரசியல்வாதிகளே காரணம் எனவும், அரசியல்வாதிகளே யுத்தத்தை மேற்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் அமைதியாக வாழ்வதனையே விரும்புகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் வடக்கு கிழக்கு மக்களுக்கு உதவிகளை வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் திறமையான கிரிக்கட் வீரர்கள் இருக்கின்றார்கள் எனவும், முறையான பயிற்சிகளை வழங்கினால் அவர்களை சிறந்த முறையில் பிரகாசிக்க வைக்க முடியும் என முரளீதரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment