Wednesday, September 21, 2011

கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிர்ப்பு : ஜெயலலிதாவுடன் போராட்டக்குழு சந்திப்பு ; உண்ணாவிரதம் வாபஸ்!

Wednesday, September 21, 2011
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷியா நாட்டு உதவியுடன் ரூ.1600 கோடி செலவில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த அணுமின் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக இல்லை என்ற தகவல் பரவியதால் கூடங்குளம், இடிந்தகரை மற்றும் சுற்றுப் பகுதி மக்கள், அணுமின் நிலையத்துக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே அணுமின் நிலையம் தொடர்பாக கூடங்குளம் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம், முதல்- அமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.

அதன் பேரில் மத்திய மந்திரி நாராயணசாமியை பிரதமர் மன்மோகன்சிங் அனுப்பி வைத்தார். நேற்று காலை சென்னையில் மத்திய மந்திரி நாராயணசாமி, தமிழக தலைமை செயலாளருடன் அணு மின்நிலையம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

பிறகு இடிந்த கரை சென்று போராட்டக் குழுவினருடன் பேசினார். மக்கள் மன உணர்வை பிரதமரிடம் தெரிவிப்பதாக உறுதியளித்தார். இன்று காலை 11 மணிக்கு நாராயணசாமி, முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை கோட்டையில் சந்தித்துப் பேசினார்.

அவருடன் இந்திய அணுசக்தி கழகத்தலைவர் எஸ்.கே.ஜெயின், கல்பாக்கம் அணுமின்நிலைய திட்ட இயக்குனர் காசிநாத பாலாஜி, மற்றும் அணுமின்நிலைய அதிகாரிகள் ஜெயலலிதாவை சந்தித்தனர். 15 நிமிடம் விரிவான ஆலோசனை நடந்தது.

அதன் பிறகு கூடங்குளம் அணு மின்நிலையத்தை எதிர்க்கும் போராட்டக் குழுவினர் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களை முதல்வர் ஜெயலலிதா வரவழைத்து கருத்து கேட்டார்.

பேச்சு வார்த்தையில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், பச்சைமால், செல்லப்பாண்டியன், செந்தூர்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேச்சு வார்த்தையில் இடம் பெற்ற போராட்டக்குழுவினர் மற்றும் முக்கிய பிரமுகர் வருமாறு:-

கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியஸ், தூத்துக்குடி ஆயர் யுவான் அம்புரோஸ், பாலபிரஜாபதி அடிகளார், அருட்தந்தையர் டி.செல்வராஜ், லியோன் கென்சன், சிவசுப்பிரமணியம், புஷ்பராயன், ஜெயக்குமார், லிட்வின், எஸ்.வி. உதயகுமார், இர்வின் சார்லஸ், தனசீலன், தமிழ்செல்வன், செல்வகுமார், சாமுவேல், வணிகர் சங்க தலைவர் த.வெள்ளையன், பி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ராஜசேகர், ஜோசப், நாஞ்சில் மைக்கேல், கிறிஸ்துதாஸ் உள்பட 22 பேர்.

ஜெயலலிதாவை சந்தித்து பேசிய பிறகு வெளியே வந்த போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்- அமைச்சரின் கோரிக்கையை ஏற்று தூத்துக்குடி ஆயர், கோட்டார் ஆயர், சி.எஸ்.ஐ. ஆயர் மற்றும் பாலபிரஜாபதி அடிகளார், சமூக நல ஆர்வலர்கள், அணுசக்திக்கு எதிராக போராட்டக் குழு பிரதிநிதிகள் ஆகியோர் சேர்ந்து பேச்சுவார்த்தையில் பங்கேற்றோம்.

எங்களது கோரிக்கைகளை முதல்-அமைச்சர் பொறுமையாக கேட்டார். எங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வரிடம் சமர்ப்பித்தோம். இது தொடர்பாக நாளையே அமைச்சரவை கூட்டத்தை கூட்டி கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், பிரதமரிடம் போராட்டக் குழுவினர் நேரம் ஒதுக்க கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் எங்களுக்கு முதல்-அமைச்சர் உறுதி அளித்தார்.

எனவே உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். முதல்- அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று நாங்கள் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கூறினோம்.

நாங்கள் ஊருக்கு சென்று அங்கு உண்ணாவிரதம் இருக்கும் 127 பேர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களிடமும் பேசி உண்ணாவிரதத்தை முடித்து வைப்போம்.

எங்களிடம் முதல்- அமைச்சர் கூறும்போது இது மத்திய அரசு சம்பந்தப்பட்ட விஷயமாக இருப்பதால் மத்திய அரசை வலியுறுத்தி உங்கள் கோரிக்கைகள் அமைய வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற முடிவெடுக்கும் போது உங்கள் பகுதி அமைச்சர்களுடனும் கலந்து பேசி முடிவெடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.

உங்களுக்கு அமைச்சர்கள் செந்தூர்பாண்டியன், செல்லப்பாண்டியன், பச்சைமால் மற்றும் பலர் முழு ஒத்துழைப்பு தருகிறார்கள். இனிமேல் எங்களது போராட்டம் மத்திய அரசின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சாத்வீகமான முறையில் அமைதி வழி போராட்டமாக இருக்கும்.

முதல்வரின் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றாலும் மத்திய அரசக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும். மாநில அரசுக்கும் முதல்வருக்கும் எங்களுடைய ஒத்துழைப்பு எப்போதும் உண்டு.

தமிழ் மண்ணில் இருந்து அணுமின் திட்டங்களை முழுமையாக அகற்றுவது அவசியமாகிறது. உலக அளவில் ஜெர்மனி, இத்தாலி போன்ற பல நாடுகளில் அணு உலைகளின் தீமைகளை புரிந்து கொண்டு அதை நிராகரிக்க போராடி உள்ளனர். இதை மற்ற நாடுகளும் பின்பற்றுகின்றன. எ

னவே எதிர்காலத்தில் இந்தியாவிலும் அணுமின் கொள்கையை மறுபரிசீலனை செய்யவேண்டும். மின் உற்பத்திக்கு எரிசக்தி மூலம் மாற்று வழியை கையாள வேண்டும் என்பதையும் வலியுறுத்தி மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்போம்.

நாங்கள் போராட்டம் நடத்தியபோது எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். அதை ஏற்று வழக்குகளை வாபஸ் பெறுவதாக முதல்- அமைச்சர் கூறினார்.

இவ்வாறு உதயகுமார் கூறினார்.

No comments:

Post a Comment