Friday, September 02, 2011
அவசரகால சட்ட விதிமுறைகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கெதிரான குற்றப்பத்திரிகைகளை இலங்கை அரசாங்கம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அல்லது அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
நேற்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நடைபெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பின் போது அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பதில் பேச்சாளர் மார்க் ட்டோர்னர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்தமையை அமெரிக்கா ஏற்கனவே வரவேற்றுள்ளதாகவும் எனினும் எவ்வாறு அவசரகால சட்ட விதிமுறைகள் நீக்கப்படுகின்றன என்பது குறித்து தாம் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை யுத்தம் நிறைவடைந்தபோது கைது செய்யப்பட்ட 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் அமைப்பின் போராளிகளில் எண்ணாயிரத்துக்கும் அதிகமானவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டதை அமெரிக்கா வரவேற்பதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தழிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தொடர்ந்தும் நெருக்கடி நிலை காணப்படுவதாக இந்த செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த பேச்சாளர் அது குறித்து தமக்கு தகவல் கிடைக்கவில்லை என்றும் எனினும் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசாங்கம் உரிய முறையில் விசாரணைகளை நடத்த வேண்டும் என்ற அமெரிக்க அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மீள நினைவுபடுத்த விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment