Thursday,September,01,2011
குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் சமர்ப்பித்த பிரேத பரிசோதனை அறிக்கைக்கு அமைய, சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை, துப்பாக்கி பிரயோகம் காரணமாக ஏற்பட்டதென உறுதி செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளது.
குறித்த கொலை தொடர்பான வழக்கு இன்று 53 ஆவது தடவையாக கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இரண்டாவது சந்தேகநபரின் முகவரியை மாற்றுவதற்கு அவரது சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.
சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது அவர் வசித்த நுவரெலியா பகுதியில் உள்ள வீட்டை தற்போது அவர் இழந்துள்ளமையினால், அவரது மனைவியின் ஊரில் சென்று வசிப்பதற்கு நீதிமன்றத்தின் அனுமதி அவசியம் என சட்டத்தரணி குறிப்பிட்டார்.
எனினும் மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளமையினால் அந்த பிணை விதிமுறைகளை மாற்றுவதற்கு இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என நீதவானும்,மேலதிக மாவட்ட நீதிபதியுமான நிரோஷா பெர்ணான்டோ சந்தேகநபருக்கு அறிவித்தார்.
பிணை விதிமுறைகளுக்கு அமைய வசிப்பிடத்தின் முகவரியை மாற்ற வேண்டுமாயின் மேல் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என நீதவான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை இம்மாதம் 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment