Thursday, September 22, 2011இந்தியாவில் கடந்த 20 வருடங்களாக வசித்து வந்த இலங்கை அகதி ஒருவரை இலங்கைக்கு நாடுகடத்துவதற்கு டெல்லி நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தன்னைத் திருப்பி அனுப்பினால் உயிராபத்து ஏற்படும் என ஒரு மனிதன் அச்சப்படும்போது அவரை நாடுகடத்த முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
போலிக் கடவுச் சீட்டில் நாட்டைவிட்டு வெளியேறி மேற்கு நாடு ஒன்றுக்குச் செல்ல முயன்றார் என சந்திரகுமார் என்பவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. கிளிநொச்சியைச் சேர்ந்த அவர் 2010ஆம் ஆண்டு இத்தாலிக்குச் செல்ல முயல்கையில் கைது செய்யப்பட்டிருந்தார். வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளியாக இருந்தபோதும் எந்த ஓர் அகதியையும் வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்ப முடியாது என நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
அகதிகளை வரவேற்பதில் நாம் (இந்தியா) மிகச் சிறந்த வரலாற்றைக் கொண்டிருந்தபோதும் அவர்களின் நலன்களைக் கவனிப்பதில் போதிய அக்கறை எடுத்துக்கொள்ளாத நிலையே இருக்கின்றது என நீதிவான் அருள் வர்மா தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
சந்திரகுமார் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டிருந்ததனால் அவருக்கு மேலதிக சிறைத் தண்டனை எதனையும் விதிக்காமல் நீதிவான் விடுதலை செய்தார். அத்துடன் அகதிகளை வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பக்கூடாது என கோரும் 2006 ஆம் ஆண்டு பிரேரணையை விரைவில் சட்டமாக்குமாறும் நீதிவான் அரசுக்குப் பரிந்துரைத்துள்ளார்.
தன்னை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த பயண முகவர், தனக்கான அனைத்து ஆவணங்களும் இந்தியச் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டன என உறுதியளித்திருந்தார் என சந்திரகுமார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment