Saturday, September 17, 2011

ஐக்கிய நாடுகள் சபை தருஸ்மன் அறிக்கையை ஐ.நா.வில் ஆராய்வதை எதிர்க்க பல நாடுகள் அணிதிரள்வு நாடு திரும்பிய அமைச்சர்கள் குழு தெரிவிப்பு!

Saturday, September 17, 2011
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் தருஸ்மன் அறிக்கை தொடர்பாக ஆராய்வதற்கு எதிராக பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவைத் திரட்டியுள்ளதாக மேற்படி பேரவையில் கலந்து கொண்ட இலங்கைத் தூதுக்குழுவின் தலைவர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று தினகரனுக்குத் தெரிவித்தார். இதன் காரணமாக இலங்கைக்கு எதிரான தருஸ்மன் அறிக்கை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் ஆராயப்படாது என்ற பெரும் நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐ.நா. மனித உரிமை பேரவை மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கைக்குழு நேற்று நாடு திரும்பியது. இந்த மாநாட்டிற்கு இலங்கை சார்பாக அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நிமல் சிறிபாலடி சில்வா, அநுர பிரியதர்சன யாப்பா, ஜனாதிபதியின் ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்தன எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டார். அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஏற்கனவே நாடு திரும்பிய தோடு அமைச்சர் நிமல் நிறிபால டி சில்வா அடங்கலான குழு நேற்று காலையும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க வேறாகவும் நாடு திரும்பினர். இதேவேளை அமைச்சர் பீரிஸ் நேற்று (16) ஜெனீவா பயணமாகிறார். (ஜெனீவா பயணம் குறித்து வினவியதற்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

தருஸ்மன் அறிக்கையை மனித உரிமை ஆணைக்குழுவின் 18 ஆவது கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்காமல் பின்கதவால் சட்டவிரோதமாக இடை நடுவில் புகுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது குறித்து அங்கத்துவ நாடுகளுக்கு நாம் அறிவூட்டினோம். இந்த நிலை ஏனைய நாடுகளுக்கும் ஏற்படலாம் என்பதை உணர்த்தினோம்.

இந்த விடயம் தொடர்பில் போதுமான அளவு எமது தரப்பு நியாயத்தை முன் வைத்துள்ளோம். அதிகமான நாடுகள் எமக்கு ஆதரவு வழங்க தயாராக உள்ளன. தருஸ்மன் அறிக்கையை மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்க அவை எதிர்ப்பு தெரிவிக்கும்.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பக்கசார்பான செயற்பாடுகளுக்கு மத்தியிலும் பெரும்பாலான நாடுகள் எமக்கு உதவ முன்வந்தன. நவநீதம் பிள்ளை எல்லா நாடுகளையும் சமமாக நடத்தாது குரோத மனப்பான்மையுடன் நடக்கிறார்.

அவரின் செயற்பாடுகள் தொடர்பில் எமது அதிருப்தியை வெளியிட்டோம். தொடர்ந்தும் இவ்வாறு ஒரு தலைப்பட்சமாக நடந்தால் அவருக்கு எதிராக பகிரங்கமாக விமர்சிக்கப் போவதாகவும் அவரிடம் கூறியுள்ளோம். எதிர்காலத்திலாவது இலங்கை தொடர்பில் நியாயமாக நடக்குமாறு கேட்டுக் கொண்டோம். மனித உரிமை பேரவை மாநாடு 2 வாரங்கள் தொடர உள்ளதோடு அடுத்த வாரம் நான் மீண்டும் ஜெனீவா செல்ல உள்ளேன் என்றார்.

இதேவேளை மனித உரிமை பேரவை மாநாடு குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா;

இந்த மாநாட்டில் இலங்கைக்கு எதிரான சவால்களை வெற்றிகரமாக சமாளித்தோம்.

வலய நாடுகள் உட்பட பல நாடுகள் எமக்கு ஒத்துழைப்பு வழங்கின. இதன் மூலம் உள்நாட்டு விவகாரங்களை ஐ.நா.வில் ஆராயும் முயற்சி தடுக்கப்பட்டது. இலங்கையின் தற்போதைய நிலைமையை நேரில் வந்து அவதானிக்குமாறு பல நாட்டு தூதுவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். தருஸ்மன் அறிக்கை குறித்து இங்கு ஆராயப்படாது என முழுமையாக நம்புகிறோம்.

No comments:

Post a Comment