Saturday, September 17, 2011

உள்நாட்டினருக்கே வாய்ப்பு சவுதியில் வெளிநாட்டு நர்சுகள் வேலை இழக்கும் அபாயம்!

Saturday, September 17, 2011
சவுதி அரேபியாவில் நர்சு வேலைக்கு உள்நாட்டினரை மட்டுமே சேர்ப்பது என்றும், வெளிநாட்டு நர்சுகள் ஒப்பந்தம் முடிந்ததும் திருப்பி அனுப்பவும் அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதனால், அங்கு பணியாற்றி வரும் இந்திய நர்சுகள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சவுதி கெஜட் இதழில் வெளியிடப்பட்டுள்ள நல்வாழ்வு அமைச்சகத்தின் நிர்வாக பிரிவு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதன்படி, நர்சு பணிக்கு நாடு முழுவதும் இனி முற்றிலும் உள்நாட்டில் செவிலியர் பயிற்சி முடித்தவர்களையே தேர்வு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன், சவுதி அரேபியாவில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் வெளிநாடுகளை சேர்ந்த நர்சுகளில் 10 ஆண்டுகள் முடிந்தவர்களின் பணிக்காலத்தை முடித்துக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், ஹெமோடயாலிசிஸ்,

எமர்ஜென்சி, ஐசியு மெடிசின் ஆகிய நிபுணத்துவம் வாய்ந்த பிரிவுகளில் பணியாற்றும் அனுபவமிக்க வெளிநாட்டு நர்சுகளை உடனடியாக விடுவிக்க தேவையில்லை. ஏனெனில், சவுதி அரேபியாவை சேர்ந்த நர்சுகள் அந்த நிபுணத்துவங்களுடன் இப்போது கிடைப்பது அரிது. எனவே, அவசர சிகிச்சைகள், முக்கிய சிகிச்சை பிரிவுகளில் பணியாற்றும் வெளிநாட்டு நர்சுகள் தொடரலாம் என்று சவுதி அரசு தெரிவித்துள்ளது.

அதேபோல, பின்தங்கிய பகுதிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் நர்ஸ் பணியிடங்களில் உள்நாட்டை சேர்ந்தவர்கள் போதுமான எண்ணிக்கையில் கிடைக்கும் வரை வெளிநாட்டினர் நீடிக்கலாம். மருத்துவ நிர்வாக மையங்கள் இந்த விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் சவுதியை சேர்ந்த அனுபவம் பெற்ற 300 நர்சுகளை உருவாக்க இந்த முறை கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது. சவுதி அரேபியாவில் பல்வேறு துறைகளில் 16 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

No comments:

Post a Comment